கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக முக்கிய 2 குற்றவாளிகளை கைது செய்ததாக கூறும் மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸின் நடவடிக்கைகளில் அதிகமான முரண்பாடுகள் காணப்படுகின்றன. டெல்லி போலீசின் இன்ஃபார்மராக செயல்பட்ட நகீ அஹ்மத் வஸி அஹ்மதின் கைது தொடர்பான சர்ச்சை மஹராஷ்ட்ரா
ஏ.டி.எஸ்ஸிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கைது சம்பவம் நடப்பதற்கு 10 தினங்கள் முன்பாக நகீயின் சகோதரர்களை மும்பை போலீஸ் வீட்டு காவலில் வைத்து இருப்பதாக குற்றம் சாட்டி நகீயின் மாமா மும்பை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்லி போலீசிடம் இருந்து எங்களை பாதுகாப்பதாக கூறிய மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸின் நடவடிக்கைகள் சந்தேகத்தை எழுப்புவதாக அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
டெல்லி போலீசின் ஸ்பெஷல் பிரிவும், மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸும் மிகவும் நல்லுறவு பேணுவதாகவும், தீவிரவாதிகளை பிடிக்க இரு புலனாய்வு பிரிவுகளும் போட்டி போட்டதாகவும் ஏ.டி.எஸ் தலைவர் ராகேஷ் மரியா கூறியிருந்தார். ஆனால், டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவிடம் இருந்து நகீயின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் கோரிக்கை விடுத்தது ஏன்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டில் இருந்து நகீ மற்றும் நதீம் அக்தர் அஷ்ஃபாக் ஷேக் ஆகியோரின் உடைகள் கிடைத்ததாக ஏ.டி.எஸ் கூறுகிறது. ஃபாரன்சிக் பரிசோதனைகள் எதுவும் நடத்தாமல் ஏ.டி.எஸ்ஸால் இந்த உடைகளை எவ்வாறு அடையாளம் காணமுடிந்தது? என்பது சமூக ஆர்வலர்களின் அடுத்த கேள்வியாகும்.
ஜனவரி 12-ஆம் தேதி இருவரையும் கைது செய்ததாக மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் கூறுகிறது. இதுவும் பொய்யாகும். ஏனெனில் ஜனவரி 9-ஆம் தேதி முதல் இவர்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நகீ பல தடவை மும்பைக்கு வந்துள்ளார் என கூறும் ஏ.டி.எஸ், இவ்வாறு நகீ பல தடவை டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவுடன் தான் வந்துள்ளார் என்பதை ஏன் விளக்கவில்லை?
நகீயிடம் இருந்து கைப்பற்றியதாக கூறப்படும் பைக், எதிர்காலத்தில் தீவிரவாத தாக்குதல்களை நடத்துவதற்காகும் என ஏ.டி.எஸ் கூறும் குற்றச்சாட்டு புலனாய்வு ஏஜன்சிகளின் வழக்கமான பாணிதான் என ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசன் அமைப்பு கூறுகிறது.
எதிர்கால தாக்குதலை முன்கூட்டியே கற்பனைச் செய்பவர்கள் அல்லவா நமது புலனாய்வு துறையினர்?
தங்களின் காரியம் முடிந்த பிறகு டெல்லி போலீசின் ஸ்பெஷல் பிரிவு நகீயை கழற்றிவிட்ட அன்றைய தினமே மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் அவரை கைது செய்து மும்பைக் குண்டுவெடிப்பு வழக்கை அவர் மீது சுமத்தியது என அசோசியேசன் குற்றம் சாட்டுகிறது.
மும்பை குண்டுவெடிப்பை குறித்து விசாரணை நடத்தி வரும் டெல்லி ஸ்பெஷல் பிரிவுக்கும், மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸுக்கும் இடையேயான பனிப்போர் தான் இன்ஃபார்மர் நகீயின் கைதில் முடிந்துள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் மீது சந்தேகத்தின் முள் முனை கூட தொட்டுவிடாமல் விசாரணை நடத்தும் மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் முன்பு பல தடவை செய்தது போலவே முஸ்லிம் இளைஞர்களை குறி வைப்பதன் மற்றொரு உதாரணம் தான் இக்கைது சம்பவம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக