வியாழன், ஜனவரி 26, 2012

அரசுப் பணியில் சேர மாஜி இஸ்ரோ தலைவர் மாதவன் நாயருக்கு தடை !

 டெல்லி: அரசுப் பணிகளில் சேர முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட 
4 பேருக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் மாதவன் நாயர் காலத்தில்தான் போடப்பட்டது. பின்னர் சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து இதை பிரதமர் தலையிட்டு ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில், மாதவன் நாயர் மற்றும் 3 முக்கிய விண்வெளி விஞ்ஞானிகள் எந்தவிதமான அரசுப் பணியிலும் சேரக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது.

விதிமுறைகளை மீறி இஸ்ரோவின் வர்த்தக அமைப்பான ஆண்டிரிக்ஸ், தேவாஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு எஸ் பாண்ட் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததுதான் இந்த ஒப்பந்தத்தின் சர்ச்சையாகும்.

மாதவன் நாயர் தவிர, முன்னாள் இஸ்ரோ அறிவியல் செயலாளர் கே.பாஸ்கர் நாராயணா, ஆண்டிரிக்ஸ் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர்மூர்த்தி, இஸ்ரோ சாட்டிலைட் மையத்தின் முன்னாள் இயக்குநர் கே.என். சங்கரா ஆகியோர் தடை விதிக்கப்பட்ட மற்ற மூவர் ஆவர்.

இந்தியாவின் முதலாவது நிலவுப் பயணத் திட்டமான சந்திராயன்-1, மாதவன் நாயர் காலத்தில்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தேவாஸ் ஒப்பந்தம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட உயர் மட்டக் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு மே 31ம் தேதி ஐந்து பேர் கொண்ட உயர் மட்டக் கமிட்டியை பிரதமர் நியமித்தார். இதன் தலைவராக முன்னாள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பிரதியுஷ் சின்ஹா செயல்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக