சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கும் எழிலகம் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க முயன்ற தீயணைப்புப் படை வீரர் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.இந்த சம்பவத்தில் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இங்கு பல அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள வணிக வரி அலுவலகத்தில் தான் முதலில் தீ பிடித்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்த சமூக நலத்துறை அலுவலகத்திற்கும் தீ பரவியது.
கட்டத்தின் வாட்ச்மேன் பாகு என்பவர் உடனடியாக தீயணைப்புப் படையினருக்கு தகவல் தந்தார்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
ஒரு மணி நேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. இதையடுத்து தீயணைப்புப் படையின் சென்னை மத்திய மண்டல அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், இரவு 1.30 மணிக்கு கட்டடத்துக்குள் நுழைந்தார். அப்போது, திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அவருடன் உள்ளே நுழைந்த தீயைணப்புப் படை வீரர் அன்பழகன் (55), அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
பிரியா, தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன், மற்றும் பிரபாகரன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலை வரை தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து வந்தது. 150க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 9 மணிக்குத் தான் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.
பலியான தீயணைப்பு வீரர் அன்பழகன் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்தவர். அவரது உடல் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்துக்கு சதிச் செயல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கட்டிடம் நாசமாகிவிட்டதால், இரு அரசுதுறை அலுவலகங்களும் தற்காலிகமாக வேறு கட்டிடத்துக்கு மாற்றப்படுகின்றன. தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் மேயர் சைதை துரைசாமி சென்று பார்வையிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக