சென்னை: சமையல் எரிவாயு ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகளின் வேலை நிறுத்தம் இன்று 4வது நாளை எட்டியுள்ளது. இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால், கடும் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.
சம்பள ஒப்பந்தம் மற்றும் புதிய டேங்கர் லாரிகளை பணியமர்த்துவது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களும் தென் மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
இது தொடர்பாக இரு தரப்பினரும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், கடந்த 12ம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர் லாரி உரிமையாளர்கள்.
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்ட இந்த தென் மண்டல எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 3500க்கும் மேற்பட்ட கேஸ் டேங்கர் லாரிகள் உள்ளன.
இவை மத்திய அரசின் 3 எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகியவற்றுக்குச் சொந்தமான 6 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து 47 கேஸ் நிரப்பும் பாட்லிங் பிளாண்டுகளுக்கு சமையல் எரிவாயுவை ஏற்றி செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இவர்களது வேலை நிறுத்தம் இன்று 4வது நாளை எட்டியுள்ளது. இதனால் இப்போது பாட்லிங் பிளாண்டுகளில் உள்ள எரிவாயு இன்னும் சில நாட்களில் தீர்ந்து விடும். அதன் பின்னர் சிலிண்டர்களில் அடைக்க கேஸ் இருக்காது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந் நிலையில் டேங்கர் லாரி உரிமையாளர்களை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் குழப்பம் நீடிக்கிறது.
இதுகுறித்து தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொன்னம்பலம் கூறுகையில், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் எங்களை இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அவர்கள் ஏன் மெளனம் சாதிக்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக