ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப்படைகளை எதிர்த்து போராடிவரும் தலிபான் இயக்கம் வளைகுடா நாடான கத்தாரில் அலுவலகம் திறக்க உள்ளது. இதனை ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்ஷாய் வரவேற்றுள்ளார். கத்தாரில் அலுவகலம் திறப்பதன் மூலம் அமெரிக்காவுடன் தலிபான் இயக்கம் பேச்சுவார்த்தை நடத்த முடியும். இவ்வாறு அலுவலகம் திறந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் ஆப்கானில் சுமுக நிலை திரும்ப வாய்ப்பிருக்கிறது என
ஆப்கான் ஜனாதிபதியி்ன் அலுவலகக்குறிப்பு தெரிவிக்கிறது. கடந்த செவ்வாய்கிழமை இவ்வாறு அலுவலகம் திறப்பதற்கு புரிந்துணர்வு ஏற்பட்டு்ள்ளதாக தலிபான் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டிருந்தது. ஆனால் அலுவலகம் எப்போது திறக்கப்படும் என்ற விபரம் அதில் இல்லை. 2011 ஆம் ஆண்டு செப்டம்பரில் பேச்சுவார்த்தைக்காக முயற்சித்து வந்த புர்ஹானுத்தீன் ரப்பானி கொல்லப்பட்ட பிறகு இந்த முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டடிருந்தது.
ரப்பானி கொல்லப்பட்ட பிறகு தலிபான்கள் அரசியல் அலுவலகம் ஒன்றைத் திறந்த பிறகுதான் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என ஹமீத் கர்ஷாய் குறிப்பிட்டிருந்தார். சவுதி அரேபியா, துருக்கி அல்லது கத்தாரில் தலிபான்கள் அலுவலகம் திறக்கலாம் என அவர் தெரிவித்திருந்தார். 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் அதிக அளவில் ஆப்கானிஸ்தானுக்கு வந்த பிறகும் தலிபான் இயக்கத்தினருக்கு எதிராக அவர்களால் வெல்ல முடியவில்லை. 2014 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்துப் படைகளும் வெளியேற உள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் பிரச்னைக்கு ஒரு தீர்வு காண்பதற்காக அமெரிக்கா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக