சென்னை: புதுச்சேரி பதிவு எண்ணோடு தமிழ்நாட்டில் ஓடும் வாகனங்களை பறிமுதல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான பதிவில் ஏற்படும் முறைகேட்டினை தடுக்கவே இந் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரியில், 20 லட்சம் ரூபாய்க்கு கீழ் மதிப்புள்ள கார்களுக்கு ஆயுள் வரி 6,000 ரூபாயும், அதற்கு மேல் உள்ள கார்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வரியாக வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கார்களின் விலை 10 லட்சம் ரூபாயாக இருந்தால் காரின் மதிப்பில் 10 சதவீதமும், அதற்கு மேல் விலை உள்ள கார்களுக்கு, ஆயுள் கால வரியாக 15 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது.
இதனால், தமிழகம், புதுச்சேரி வரி விதிப்புக்கு இடையே, பல மடங்கு வித்தியாசம் உள்ளது. எனவே தமிழ்நாட்டில் கார் வாங்குபவர்கள், புதுச்சேரி மாநிலத்தில் போலியாக முகவரி கொடுத்து, நிரந்தர பதிவு செய்கின்றனர். பலர் புதுச்சேரியிலேயே கார்களை வாங்கி பதிவு செய்து, தமிழகத்தில் பயன்படுத்துகின்றனர். இதனால் அரசுக்கு, பல கோடி ரூபாய் வருமானம் குறைகிறது.
வாகனங்கள் பறிமுதல்:
எனவே புதுச்சேரியில் பதிவு செய்து, தமிழகத்தில் ஓடும் வாகனங்கள் குறித்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்த உள்ளனர். புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து, பதிவு செய்த வாகனங்களை பறிமுதல் செய்யவும், அரசு உத்தரவிட்டுள்ளது.
பறிமுதலாகும் வாகனங்களுக்கு, தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள வரியை செலுத்தினால், மீண்டும் வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக