யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு, சிக்கன நடவடிக்கைகள் மட்டும் பலன் தராது என, சர்வதேச நிதியமைப்பு உள்ளிட்ட அமைப்புகளும் நாடுகளும் வலியுறுத்தி வரும் வேளையில், ஜெர்மனியும், பிரான்சும் முன்வைத்த பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் அடங்கிய புதிய ஒப்பந்தத்தை யூனியனின் 25 நாடுகள் ஏற்றுக் கொண்டன. பிரிட்டனும், செக் குடியரசும் ஒப்பந்தத்திற்கு
எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதிய ஒப்பந்தம்: யூரோ கரன்சி பயன்படுத்தும் நாடுகள் அடங்கிய யூரே மண்டலப் பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, கடந்தாண்டு டிசம்பர் 9ம் தேதி, ஜெர்மனியும், பிரான்சும் இணைந்து புதிய ஆலோசனையைத் தெரிவித்தன. அதன்படி, நாடுகளின் இறையாண்மையை விட்டுக் கொடுக்காமல், அதேநேரத்தில், தாறுமாறான பட்ஜெட்டுகளை நாடுகள் அமல்படுத்தாமல் தடுக்கும் வகையில், யூரோ மண்டல நாடுகள் அனைத்தும் பங்கேற்கும் புதிய ஒப்பந்தம் ஒன்று செயல்படுத்தப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடியில் தடுமாறும் ஐரோப்பிய நாடுகள், மேலும் சிக்கலுக்கு உள்ளாகாமல், அவற்றின் நிதிப் பற்றாக்குறையைக் குறைத்து, வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை இந்த ஒப்பந்தம் பரிந்துரைக்கிறது. முதலில் யூரோ மண்டலத்தின் 17 நாடுகளுக்கு மட்டுமான இந்த ஒப்பந்தம் பின்னர், ஐரோப்பிய யூனியனின் 27 நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என, அப்போது முடிவு செய்யப்பட்டது.
25 நாடுகள் ஒப்புதல்: இந்நிலையில், இந்த ஒப்பந்தம் குறித்த ஐரோப்பிய யூனியனின் சிறப்புக் கூட்டம், நேற்று முன்தினம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடந்தது. இக்கூட்டத்தில், ஜெர்மனியும், பிரான்சும் ஏற்கனவே முன்வைத்த, புதிய நிதிக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்திற்கு, ஐரோப்பிய யூனியனின் 25 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
பிரிட்டன் எதிர்ப்பு: ஆனால் பிரிட்டனும், செக் குடியரசும் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்தாண்டு டிசம்பரில் நடந்த ஐரோப்பிய யூனியன் கூட்டத்திலேயே இந்த ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கூறுகையில்,"இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில், ஐரோப்பிய மத்திய வங்கி உள்ளிட்ட அமைப்புகளை எவ்விதம் பயன்படுத்துவது என்பது போன்ற சட்டப்பூர்வ சிக்கல்கள் உள்ளன' என்றார். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதில், அரசியல் அமைப்புச் சட்ட ரீதியிலான சிக்கல்கள் இருப்பதாக செக் குடியரசு தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம் தாக்குப் பிடிக்குமா: இந்த எதிர்ப்புகளைத் தாண்டி, ஒருவேளை இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய யூனியனால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் கூட, யூரோ மண்டலப் பொருளாõதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இந்த ஒப்பந்தத்தால் முடியாது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். ஜெர்மனி தொடர்ந்து யூரோ மண்டல நாடுகளை கடனில் இருந்து மீட்பதற்காக, தனது வரிப்பணத்தைச் செலவிட்டு வருவது உள்நாட்டில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. அதைத் தணிப்பதற்காகத் தான் இந்த ஒப்பந்தத்தை ஜெர்மனி முன் வைத்துள்ளது என, தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வெறும் சிக்கன நடவடிக்கைகள் மட்டுமல்ல என்பதை ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உணர்ந்துள்ளன. அதையே, சர்வதேச நிதியமைப்பு (ஐ.எம்.எப்.,) உள்ளிட்ட அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
மார்ச்சுக்குள்... இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஓரளவுக்கு, யூரோ மண்டல பொருளாதார நெருக்கடியைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என ஜெர்மனியும், பிரான்சும் கருதுகின்றன. இந்தாண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த ஒப்பந்தம், அனைத்து ஐரோப்பிய நாடுகளின் பார்லிமென்ட்டுகளிலும் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
சிக்கன நடவடிக்கைகள் மட்டும் போதாது: வேலைவாய்ப்புகள், சம்பளம் ஆகியவற்றைக் குறைத்தல், வரிகளை அதிகரித்தல் உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முதலீடுகளை அதிகரித்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சங்களாக இடம் பெற்றுள்ளன. அதேநேரம், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட நாடுகள் தங்களின் நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றின் மீது தன்னிச்சையாக பொருளாதாரத் தடைகள் பாயும் வகையும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக