விரைவில் செல்போன் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன. இந்தியாவில் செல்போன் சேவைகளை ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இடையே வாடிக்கையாளர்களை கவர கடும் போட்டி நிலவுகிறது.
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒரு கட்டத்தில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு கட்டணங்களை குறைத்தன. ஆனால் வாடிக்கையாளர்களிடம் இருந்து எதிர்பார்த்த அளவில் வருமானம் ஈட்ட முடியவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஆண்டு போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் 20 சதவீத கட்டண உயர்வை அமல்படுத்த செல்போன் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
புதிய கட்டண முறைப்படி, செல்போனில் இருந்து பேசும் எஸ்.டி.டி. மற்றும் லோக்கல் அழைப்புகளுக்கு ஒரு நொடிக்கு ஒரு பைசா வீதம் 1 நிமிடத்திற்கு 60 பைசா என்று இருந்த கட்டணம், இனி 1 நிமிடத்திற்கு 1.20 பைசா என்று உயர்த்தப்படவுள்ளது.
அதேபோல் செல்போனில் இருந்து லேண்ட் லைன் போன்களுக்கு பேசவும் கட்டணம் உயரவுள்ளது.
போஸ்ட் பெய்ட் உபயோகிப்பாளர்களுக்கு 20 சதவீத கட்டண உயர்வை ஏற்கனவே வோடபோன் நிறுவனம் அமல்படுத்தி உள்ளது. இது குறித்து வோடபோன் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், கட்டண உயர்வு தற்போது டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் படிப்படியாக கட்டண உயர்வு அமல்படுத்தப்படும். வருவாயை கணக்கிடும் போது கட்டணம் உயர்த்துவதை தவிர்க்க முடியவில்லை. மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் விரைவில் கட்டண உயர்வை அறிமுகப்படுத்துவார்கள் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக