எஸ்.எம். கிருஷ்ணா 4 நாள் பயணமாக நேற்று இலங்கை சென்றார். கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய அவரை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் வரவேற்றார். அதையடுத்து அவர்கள் முக்கிய பிரமுகர்கள் அறைக்குச் சென்று பேசினர்.
பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தம், தமிழர் தலைவர்கள் மற்றும் முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அவர் இன்று சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அப்போது அவர், இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் வீடு கட்டும் திட்டத்தை விரிவுபடுத்தவும், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்துவது குறித்தும், ஈழத் தமிழர் விவகாரத்தில் அதிகார பகிர்வு மூலம் தீர்வு காண்பது குறித்தும் வலியுறுத்துவார் என்று கூறப்படுகின்றது.
அதன் பிறகு அந்நாட்டு பிரதமர் டி.எம். ஜெயவர்த்தனே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் ஆகியோரையும் சந்தித்து பேசுகிறார். இதையடுத்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, காலே ஆகிய இடங்களுக்கு சென்று மறுவாழ்வுப் பணிகளை பார்வையிடுகிறார்.
கொழும்பில் உள்ள இந்திய அமைதிப்படையின் நினைவு சின்னத்தில் அவர் மரியாதை செலுத்தவிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களுக்கு 49,000 வீடுகள் கட்டிக் கொடுக்க இந்தியா ரூ.1,319 கோடி நிதி அளித்துள்ளது. அதில் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள 50 வீடுகளை தமிழர்களுக்கு எஸ்.எம். கிருஷ்ணா வழங்குகிறார். இது தவிர தமிழர்களுக்கு 10,000 சைக்கிள்களும் வழங்குகிறார்.
கிளிநொச்சி செல்லும்போது கிருஷ்ணா அங்குள்ள தமிழர்களுக்கு மருந்துப் பொருட்கள் வழங்குகிறார். காலே நகரில் இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களை அவர் துவங்கி வைக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக