செவ்வாய், ஜனவரி 10, 2012

முஸ்லீம் இட ஒதுக்கீடு-சல்மான் பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு-தேர்தல் ஆணையத்திடம் புகார்


லக்னெள: பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளதற்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கு 6 முதல் 9 சதவீதம் வரை இட ஓதுக்கீடு கிடைக்க ஆவன செய்வோம் என்றார்.

இவரது பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 

இது தேர்தல் சட்ட விதிமுறைக்கு எதிரானது என்றும், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசியல் சட்டத்துக்கே எதிரானது என்றும் பாஜக கூறியுள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷனிடம் பாஜக புகார் தந்துள்ளது. இதையடுத்து சல்மான் குர்ஷிதுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், தேர்தல் நேரத்தில் ஒரு மத்திய அமைச்சர் இவ்வாறு பேசுவது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளோம்.

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஓட்டுக்களை பெற, இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளன என்றார்.

இந் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷிதுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந் நிலையில், பாஜகவின் புகாருக்கு பதில் தந்துள்ள சல்மான், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பாஜக கூறுவது தவறில்லையா?, அது மட்டும் எப்படி தேர்தல் விதிகளின்படி சரியாகும்.

உத்தர்கண்ட் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை:

உத்தர்கண்ட் மாநிலத்தில் கடுமையான பனிப் பொழிவு நிகழ்ந்து வருவதால் சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். இது குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம்.

அந்த மாநிலத்தில் பல பகுதிகளில் கடுமையான பனி பெய்து வருகிறது. இதனால் ஓட்டுப்போட வரும் மக்களுக்கு சிரமம் ஏற்படும். அந்த பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கும் அரசியல் கட்சிகளுக்கு சிரமம் ஏற்படும். எனவே தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

மாயாவதி சிலைகளை மறைப்பதற்கு ரூ.1 கோடி:

இந் நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதியின் சிலைகள் ரூ.1 கோடி செலவில் மூடப்படவுள்ளன.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உத்தரப் பிரதேசம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மாயாவதியின் சிலைகளை மூடி வைக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்த மாநில அரசின் நிதியில் இருந்து ரூ.1 கோடி செலவிடப்பட உள்ளது.

அதே போல ரூ. 3 கோடி செலவில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சின்னமான யானைகளின் சிலைகளும் மூடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக