புதன், ஜனவரி 04, 2012

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி: வளைகுடா நாடுகள் இந்தியாவை நோக்கி!


அமெரிக்காவிற்கு அடுத்து ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் இந்தியாவுக்கு அது ஆதாயமாக மாறியுள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து பெருமளவிலான முதலீடு இந்தியாவை நோக்கி திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் மத்திய அரசு உள்ளது. இந்தியாவின் அடிப்படை வசதிகள் துறையில் பெருமளவிலான தொகையை முதலீடுசெய்ய தயார் என
வளைகுடா நாடுகள் இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி உருவாக்கியுள்ள நிச்சயமற்ற தன்மை இந்தியா மற்றும் சீனாவில் முதலீடுகளை மாற்றுவதை குறித்து சிந்திக்க வளைகுடா நாடுகளை தூண்டியுள்ளது.
அமெரிக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு கருதி முதலீட்டின் பெரும் பகுதியை வளைகுடா நாடுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு மாற்றின. அதன் பலன் இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளுக்கு குறைந்த அளவே கிடைத்தது. தற்பொழுது இந்தியாவிலும் இதர நாடுகளிலும் தங்களுடைய முதலீடு கூடுதல் பாதுகாப்பாக இருக்கும் என வளைகுடா நாடுகள் கருதுகின்றன.
சவூதிஅரேபியா, கத்தர், குவைத், ஐக்கியஅரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகள் இந்தியாவில் கூடுதலாக முதலீடு செய்ய தயார் என அறிவித்துள்ளன. குவைத் இன்வெஸ்ட்மெண்ட் அதாரிட்டி மட்டும் 10 பில்லியன் டாலர் தொகையை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது. பின்னர் தொடர்ந்துவரும் 2 வருடங்களில் 1.5 பில்லியன் டாலரை முதலீடுச் செய்யும். எண்ணெய்துறை, எரிவாயு, எரி சக்தி,சாலைகள், இரசாயனம், சுற்றுலா ஆகிய துறைகளிலும் கூடுதல் முதலீடுகள் வரும்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அண்மையில் சவூதிஅரேபியா  மற்றும் கத்தர் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். இந்தியாவின் பெரிய திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவதாக இரு நாட்டின் ஆட்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். இதனை மேனன் பிரதமர் உள்ளிட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இந்தியாவில் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவே முதலீடு செய்துள்ளன. பிரதமரின் சவூதி சுற்றுப்பயணமும் முதலீடு செய்வதற்கு ஆதரவான சூழலை உருவாக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
வளைகுடா நாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன. ஆனால், நிதியியல் துறையில் சில மாற்றங்களை அவர்கள் கோருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் கூட இஸ்லாமிய வங்கியல் நடைமுறையில் உள்ளதால் வளைகுடா நாடுகள் அங்கு முதலீடு செய்ய கூடுதல் வாய்ப்புகள் உள்ளன. கூடுதல் தாமதம் ஏற்படாமல் இதைப் போன்றதொரு சூழல் இந்தியாவிலும் உருவாகும் என அரசு சூசகமாக குறிப்பிடுகிறது.
இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 10-வது இடமாகும். ஆனால், சவூதி 45-வது இடத்தை வகிக்கிறது. 2000-ஆம் ஆண்டு முதல் 2011 வரையிலான 10 ஆண்டு காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து 673,253 கோடி ரூபாய் முதலீடாக கிடைத்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் இருந்து வாபஸ்பெறும் தொகையில் சிறியதொரு சதவீதத்தை இந்தியாவிற்கு வளைகுடாநாடுகள் மாற்றினாலே அது பெரியதொரு ஆதாயமாக மாறும் எனகருதி மத்திய அரசு அந்நாடுகளின் முதலீடுகளை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
சவூதி இளவரசர் வலீத் பின் தலால் ட்விட்டர் என்ற சமூக இணையதளத்தின் பங்குகளை 30 கோடி டாலரை கொடுத்து வாங்கிய செய்தியை இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக