புதன், ஜனவரி 04, 2012

சீனாவில் வியாபாரம் செய்ய வேண்டாம் - இந்திய வியாபாரிகளுக்கு எச்சரிக்கை !


 இவு வர்த்தக மையத்தில் வியாபாரம் செய்ய வேண்டாம் என்று இந்திய வியாபாரிகளுக்கு சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜிஜியாங் மாகாணம், இவு பகுதியில் செயல்பட்ட நிறுவனமொன்று நிலுவைத் தொகையை தராததால், அதில் பணியாற்றிய இந்தியர்கள் ஷியாம் சுந்தர் அகர்வால், தீபக்
ரஹேஜா ஆகியோரை சீன வர்த்தகர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர்.பின்னர், அவர்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றதைத் தொடர்ந்து, அவர்களை மீட்க கடந்த டிசம்பர் 31-ம் தேதி இந்திய தூதரக அதிகாரி பாலசந்திரன் சென்றார். அப்போது பாலசந்திரனை நீதிமன்ற வளாகத்தில் சீன வர்த்தகர்கள் தாக்கினர். காயமடைந்த பாலசந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்தியர்கள் இருவரின் பாதுகாப்பைக் கருதி, அவர்களை ஹோட்டல் ஒன்றில் பொலிஸார் தங்க வைத்துள்ளனர். மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இவு பகுதிக்கு வியாபாரம் செய்யச் செல்லும் இந்தியர்களுக்கு, பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவு பகுதியில் உள்ள சீன வியாபாரிகளிடம் தொடர்பு கொண்டு எந்த வியாபாரமும் செய்ய இந்தியர்கள் முயற்சிக்க வேண்டாம். இப்போது வியாபாரம் செய்து வருபவர்களும் தங்களது பணப் பரிவர்த்தனையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வர்த்தக ரீதியாக தகராறு ஏற்படும்போது, இந்திய வியாபாரிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கும் போக்கு அப்பகுதியில் உள்ளது. மேலும், கடுமையான தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர். இது போன்ற பிரச்னை எழும்போது, இந்திய வர்த்தகர்களுக்கு சட்டரீதியான உதவிகளைச் செய்வதில் சிக்கல் நிலவுகிறது. மேலும், இந்திய வியாபாரிகளுக்கு அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் தங்கியுள்ளனர் என்றும், கடந்த ஆண்டு பல கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் பொருள்களைக் கொள்முதல் செய்தனர் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக