சென்னை: இருளர் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் 5 பேரை திருக்கோவிலூர் போலீசார் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்பது புகாராகும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீசார் மீது நடவடிக்கைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சாதாரண பாலியல் வழக்கிற்கு போலீசார் நடவடிக்கை எடுக்கும் நிலையில், திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீசார் 5 பேரை தமிழக அரசு இதுவரை கைது செய்யாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சட்டத்திற்கு புறம்பாக பெண்களை காவலில் வைத்தது தவறு என தமிழக அரசே ஒப்புக் கொண்ட பின்னரும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்காதது சரியல்ல எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்ட போலீசார் விரைவில் கைது செய்யப்படுவர் என உறுதி அளித்துள்ளார். மேலும் போலீஸ் மீதான விசாரணையை முடிக்க, அரசு தரப்பில் 2 வாரம் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக