சென்னை: தூத்துக்குடியில் பெண் மருத்துவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் சேதுராமலட்சுமியின் தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற மகேஷ் என்பவரின் கர்ப்பிணி மனைவி உயிரிழந்தார். இதனையடுத்து சேதுராமலட்சுமி திங்கட்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக, ஆட்டோ ஓட்டுனர் மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் மருத்துவரின் படுகொலை சம்பவத்திற்கு தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மருத்துவர்கள் வேலை நிறுத்தம்
இந்த நிலையில் மதுரை, சேலம், கோவை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, புதுக்கோட்டை, தஞ்சை, திண்டுக்கல், திருவள்ளூர்,
ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். மதுரை ராஜாஜி மருத்துவமனை முன்பு கூடியிருந்த மருத்துவர்கள், கடந்த சில வருடங்களாக மருத்துவர்களின் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக தெரிவித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இனி மருத்துவர்கள் அச்சமடைய நேரிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணிகள் பாதிப்பு
மருத்துவர்களின் இந்தப் போராட்டம் காரணமாக, மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளும், புற நோயாளிகளும் சிகிச்சை பெற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக