துருக்கிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பலஸ்தீன் பிரதமர் இஸ்மாயீல் ஹனீய்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.01.2012) இஸ்தான்பூல் வந்தடைந்தார்.
பிராந்திய நல்லுறவை மேம்படுத்துமுகமாக முதலில் எகிப்துக்கும் பின்னர் சூடானுக்கும் சென்றுவிட்டு, துருக்கியை அடைந்துள்ள இஸ்மாயீல் ஹனீய்யா, துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகானால் வெகு விமரிசையாக வரவேற்கப்பட்டார்.
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையினால் மிகத் தந்திரமான முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நாசகார வேலைகள், யூதமயமாக்கம், ஜெரூசலவாசிகளான முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவருதல், புனிதத் தலங்களின் பாதுகாப்பு முதலான இன்னோரன்ன விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர். பலஸ்தீனின் ஒருங்கிணைவு குறித்து தன்னுடைய அக்கறையை வெளிப்படுத்திப் பேசிய அர்தூகான், காஸாவின் புனரமைப்புப் பணிகள் குறித்தும் அளவளாவினார்.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் துருக்கியப் பிரதமர் கருத்துரைத்தபோது, "பலஸ்தீன் மக்களால் பொதுத் தேர்தலின் மூலம் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டது என்றவகையில், ஹமாஸ் ஒரு சட்டபூர்வமான விடுதலை இயக்கமாகும். ஜனநாயக முறையை நேசிக்கும் எவரும் பொதுமக்களின் விருப்பத்தையும் தெரிவையும் மதிப்பது இயல்பானதாகும். துருக்கி இஸ்ரேலுடனான அரசியல் தொடர்பை மீண்டும் தொடர்வதற்காக முன்வைத்துள்ள மூன்று முன் நிபந்தனைகளுள் காஸா மீதான இஸ்ரேலிய முற்றுகையை நீக்கிக்கொள்ள வேண்டும் என்பதும் ஒன்றாகும்" என்று குறிப்பிட்டார்.
இஸ்மாயீல் ஹனிய்யா தமது உரையில், இஸ்ரேலினால் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் பலஸ்தீன் பொதுமக்களின் அபிலாஷைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்காக அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக துருக்கி காட்டிவரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.
காஸாவுக்கு நிவாரண உதவிகளைச் சுமந்து வந்த துருக்கியின் மாவி மர்மரா கப்பலில் வைத்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட துருக்கிய சமாதானச் செயற்பாட்டாளர்களின் குடும்பங்களுக்கு ஹனிய்யா தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் நன்றியறிதலையும் தெரிவித்துக் கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக