புதன், ஜனவரி 18, 2012

காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டதை விசாரிக்காத இந்தியா - இலங்கை அமைச்சர் குற்றச்சாற்று !

காஷ்மீரில் 9000 மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டது சம்பந்தமாக விசாரணைக்கு உடன்படாத இந்தியாவுக்கு இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறி விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்பதற்கு எந்தவித அருகதையும் இல்லை" என இலங்கை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (16.01.2012) கொழும்பு மகாவலி நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றுகையில் சம்பிக்க இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே நியமித்த நல்லிணக்க ஆணைக்குழு தனது வரம்பை மீறி
பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இறுதிக்கட்ட யுத்தம் பற்றி சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும், அதிகாரப் பரவலை மேற்கொள்ள வேண்டும் என்றும் அனைத்து சிறுபான்மையினருக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அந்தக் குழு பரிந்துரை செய்திருந்தது.

இந்தப் பரிந்துரைகளை ஏற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. "காஷ்மீரில் 9000 மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டது சம்பந்தமாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த இந்தியா, இலங்கையை எவ்வாறு வலியுறுத்த முடியும்?" என அமைச்சர் இந்தக் கருத்தரங்கில் கேள்வி எழுப்பினார்.

மேலும் "இந்த ஆணைக்குழு அறிக்கையில் முஸ்லிம் மக்கள் மீண்டும் குடியேற்றப்பட வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்த 159,000 சிங்களவர்களைப்பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை" என்றும் சம்பிக்க சுட்டிக்காட்டினார். "தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இனவாதத்திற்கு நாம் அடிபணியாமல் ஓரணியில் நிற்க வேண்டும்" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக