வியாழன், ஜனவரி 19, 2012

இன்னோறுஅதிர்ச்சிக்கு தயாராக இந்தியன் !

இந்தியாவில் அனல்மின் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களின் தலைவர்களைப் பிரதமர் மன்மோகன் சிங் இம்மாதம் 18-ம் தேதி (நாளை) சந்தித்துப் பேசவிருக்கிறார் . இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் ஒவ்வொரு மனிதனுக்கும் மின்அதிர்வை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். கடந்த ஆறு மாத காலமாக இக்கூட்டத்தைக் கூட்டாமல் தள்ளிப்
போட்டுவந்த பிரதமரால் இனியும் தாமதப்படுத்த முடியாத சூழ்நிலையில்தான் இக்கூட்டம் நடத்தப்படுகிறது. ஏனெனில், தற்போது நிலக்கரியின் விலை இரு மடங்காக உயர்ந்துவிட்டதால், இனியும் இந்தக் கூட்டத்தை நடத்தாவிட்டால் ஒன்று, மின்நிலையங்களின் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வது அல்லது மூடிவிடுவது என்ற இரண்டு வழிகளைத் தவிர, வேறு வழியே இல்லை என்று மத்திய அரசுக்குப் புரிய வைத்ததன் விளைவுதான் இந்தக் கூட்டம்.
இந்திய நிலக்கரி நிறுவனம் தான் எடுக்கும் நிலக்கரிக்கு விலை நிர்ணயம் செய்வதில், அதன் எரிசக்தி மற்றும் சாம்பல் தன்மைக்கு ஏற்ப 7 விதமாகத் தரம் பிரித்திருந்தது. தற்போது இந்தத் தரம் பிரிக்கும் செயலை உலக அளவில் மற்ற நிலக்கரி சுரங்கங்கள் என்ன முறையைக் கையாளுகின்றனவோ அதேபோன்ற நடைமுறையை தற்போது அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் நிலக்கரி 17 விதமாகத் தரம் பிரிக்கப்படும்.
இந்தத் தரம் பிரிப்பு காரணமாக, தொழில் சாரா நிறுவனங்களுக்குக் கிடைக்கும் நிலக்கரிக்கும், வீட்டு நிலக்கரிக்கும் விலை உயராது என்றும், ஆனால் தொழிற்கூடங்களுக்குப் பயன்படும் நிலக்கரியின் விலையில் 30 விழுக்காடு வரை விலை உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அனல்மின் நிலையங்களைப் பொருத்தவரை விலையில் பெரும் மாற்றம் இருக்காது என்றாலும், விற்பனை வரி 6 விழுக்காடு கூடுதலாகும் என்றும் தெரிகிறது.
இந்தியாவில் கிடைக்கும் நிலக்கரி இந்திய அனல்மின் நிலையத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா நாடுகள் தங்கள் நாட்டு நிலக்கரிக்கு அதிக வரி விதித்திருப்பதால் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை வழக்கத்தைவிட 5 மடங்காக உயர்ந்துவிட்டது.
இந்த நிலக்கரி உயர்வை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டுமானால், வரி விலக்கு அளிப்பதைத் தவிர வழியில்லை. இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கு சுங்கத்தீர்வை விலக்கு அளிப்பதும் அவசியம். ஆனால், அதைச் செய்தால் இந்திய அரசுக்கு நிதிச் சுமை மேலும் கூடும் என்பதால், மின்கட்டணத்தை உயர்த்த அனுமதிப்பதன் மூலம் இந்த உயர்வை அனல் மின் நிலையங்கள் தகவமைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று திட்டக் குழு கருதுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், எப்போதும் திட்டக் குழுத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறுவதை ஏற்றுக்கொள்பவர். ஆகவே இப்போதே இந்தக் கூட்டத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதைச் சொல்லிவிட முடியும்.
தமிழக அரசும் ஏற்கெனவே அறிவித்துள்ளபடி மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. சாதாரண வீட்டு மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், அதே நேரத்தில் மின்வாரியத்துக்கு இழப்பும் ஏற்படாமல் மின்கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே உறுதி கூறியுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆயிரம் சதுர அடியில் கட்டப்படும் அனைத்து வீடுகளிலும் கதிரொளி வென்னீர்க்கலன் அமைத்தால் மட்டுமே மின்இணைப்பு வழங்க முடியும் என்ற நிபந்தனையைக் கட்டாயமாக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்காற்று ஆணையத்திடம் வலியுறுத்துவதென தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்விநியோகக் கழகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இது வரவேற்கத் தகுந்த ஒன்றுதான். தமிழ்நாட்டில் மழைநீர் சேமிப்புத் தொட்டியை தமிழகத்தின் அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக்கிய பெருமை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு. இதனால் நிலத்தடி நீர் சற்று உயர்ந்துள்ளது.
இதேபோன்று, புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் மட்டுமன்றி, ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள 1,000 சதுர அடி அளவுள்ள அனைத்து வீடுகளிலும் கதிரொளி வென்னீர்க்கலன் அமைக்கப்படுவதை தமிழக அரசு கட்டாயமாக்கினால் மின்வாரியத்துக்கு மின்சாரம் சேமிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, ஒவ்வொரு வீட்டினரும் கட்டக்கூடிய மின்கட்டணமும் கணிசமாகக் குறையும்.
ஒரு கதிரொளி வென்னீர்க்கலன் மூலம் 1 கிலோவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். கோவை மாநகரில் மட்டும், புதிய வீடுகளுக்கு இத்திட்டத்தை அமல்படுத்தினால் 50 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்கிறார்கள். அப்படியானால், இத்திட்டம் புதிய வீடுகள், பழைய வீடுகள் எல்லாவற்றுக்கும் பொதுவானதாகவும் எல்லா நகரங்களிலும் சோலார் ஹீட்டர் அமைக்கப்படுமேயானால் எந்த அளவுக்கு மின்சாரம் மிச்சமாகும் என்று கணக்கிட்டுப் பார்க்க முடியும்.
இதுஒருபுறம் இருந்தாலும், காஸ் விலை உயர்வைக் காரணம் காட்டி, எலக்ட்ரிக் குக்கர், அவண், இன்டக்ஷன் ஸ்டவ் என மின்சாரத்தின் மூலம் பயன்படுத்தும் சமையல் கருவிகள் பலவும் சந்தையில் குவிந்துகொண்டே இருக்கின்றன.
மின்சாரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எதற்குப் பயன்படுத்தினால் செலவை மிச்சப்படுத்தலாம் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை மின்வாரியத்துக்கு உள்ளது. மின்கட்டணத்தை உயர்த்துவது மட்டுமல்ல, மின்செலவைக் குறைக்க வழிசொல்வதும், ஆலோசனை வழங்குவதும்கூட மின்வாரியத்தின் வேலைதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக