அரசுக்கும் ராணுவத்துக்கும் கருத்து மோதல் ஏற்படுவது வழக்கமாக பாகிஸ்தானில் மட்டும்தான் இதுநாள் வரை நடந்து கொண்டிருந்தது. இந்த நோய் தற்போது இந்தியாவையும் தொற்றிக்கொண்டுவிட்டது. ராணுவத் தளபதி வி.கே. சிங் தனக்கான நியாயம் கேட்டு நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பாக அரசுப் பணியில் சேர்ந்த பலருக்கும் இரண்டு பிறந்த நாள் - வீட்டிலும் ஏட்டிலும் - இருப்பது மிகச் சாதாரணமானது. பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில், பள்ளிச் சான்றிதழில் குறிக்கப்பட்டுள்ள தேதியையே பிறந்த தேதியாகக் கொண்டு, வயது கணிக்கப்படுவது வழக்கம். ஆனால், வி.கே. சிங் விவகாரத்தில் அவரது பிறப்புச் சான்றிதழிலும், பள்ளிச் சான்றிதழிலும் அவர் பிறந்த தேதி மே 10, 1951 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ராணுவப் பதிவேடுகளில் அவரது பிறந்த தேதி மே 10, 1950 என்று குறிக்கப்பட்டுள்ளதால், அவர் இந்த ஆண்டு மே 31-ம் தேதியுடன் ஓய்வுபெற வேண்டும் என்று பாதுகாப்புத் துறை கூறியது. இது ஒரு தவறு. இது எங்கே நேர்ந்தது, இதற்கு யார் காரணம் என்பது இப்போது முக்கியமில்லை. இந்தத் தவறைச் சரி செய்ய முடியுமா, முடியாதா? இதைத் தீர்மானிக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய விவகாரம்தானா என்று யோசிக்கும்போது, மத்திய அரசின் மெத்தனத்தைத் தவிர, வேறு எதையும் குற்றம் சொல்ல முடியவில்லை.
வி.கே.சிங், ஏதோ ஒரு படைப்பிரிவின் ராணுவ வீரர் அல்ல. அவர் இந்திய ராணுவத் தளபதி. அவருக்கு இத்தகைய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்கின்றபோது, அவரே இதுகுறித்து பாதுகாப்புத் துறையிடம் முறையிட்டுள்ளபோது, அரசு என்ன செய்திருக்க வேண்டும்? பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனி, பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலர் சர்மா மற்றும் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் அமர்ந்து பேசி, இந்தப் பிரச்னைக்கு ஒரு சில மணி நேரத்தில் தீர்வு கண்டிருக்க வேண்டாமா?
வி.கே. சிங் பிறந்த தேதி அவரது கூற்றுப்படி 1951 என்பதே சரி என்பதால், ஆவணங்களை நேர்ப்படுத்தி அவரைப் பணியில் மேலும் ஓராண்டுக்குத் தொடர்ந்து சேவையாற்ற அனுமதித்திருக்கலாம் அல்லது ஆவணங்களை நேர்ப்படுத்தினால் வேறு சிக்கல்கள் எழக்கூடும் அல்லது தவறான முன்னுதாரணமாக பின்னாளில் சுட்டிக் காட்டப்படும் என்று பாதுகாப்புத் துறை கருதியிருந்தால், இந்தச் சிக்கல்களை வி.கே. சிங்கிடம் தெரிவித்து, ராணுவத்தின் கெளரவம் கருதி, இதைப் பெரிதுபடுத்தாமல் ஓய்வு பெறவும், இதனால் அவருக்கு ஏற்படும் இழப்புகளைச் சரிசெய்யும் வகையில் அவருக்கு வேறு பொறுப்புகளை அளிக்கவும் சமாதானப்படுத்தியிருக்கலாம். ஆனால், இதை எதையும் மத்திய பாதுகாப்புத் துறை செய்யவில்லை.
இப்போது அவர் உலகம் அறிய நீதிமன்றத்தின் படிகளை ஏறிய பின்னர், இதில் என்ன முடிவு எடுக்கலாம் என்று கேட்டறிய பிரதமரைச் சந்திக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி. அரசின் கருத்தைக் கேட்காமல் இந்த வழக்கில் ஒருதரப்பாக தீர்ப்பு அளிக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கின்றது அரசு. எதற்காக இந்தக் கேலிக்கூத்துகள்?
இதற்குக் காரணம் அரசு இன்னொரு அதிகாரியை ராணுவத் தளபதியாக நியமிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பதுதான் இந்த "அரசியலுக்கு' காரணம் என்கிறார்கள். இதுவரை நிர்வாகத்திலும் நீதித்துறையிலும்தான் அரசு தனக்கு வேண்டியவர்களை நியமிப்பதில் மூக்கை நுழைத்தது. இப்போதுதான் தெரிகிறது அதே அணுகுமுறை பாதுகாப்புத் துறையிலும் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது.
1970-ல் ராணுவக் கல்லூரியில் படித்து சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற வி.கே. சிங் இத்தனை ஆண்டுகளாகத் தனது திறமையால் ராணுவத் தளபதி நிலைக்கு உயர்ந்தவர். கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் பெயரால் நடைபெற்ற ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் தொடர்புடைய ராணுவ அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தவர். அத்துடன், மேற்கு வங்கத்தில், ராணுவ நிலத்தைத் தனியார் பள்ளிக்குத் தாரை வார்த்த ராணுவ அதிகாரி ஓய்வுபெற்றுவிட்ட நிலையிலும்கூட அவரது பதவியைப் பறித்தவர். இவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை. திறமையானவர் என்று ராணுவத்தின் பல்வேறு பதவிகளில் உள்ள சமகால ராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர். இத்தகைய நற்பெயர் உள்ளவரை இந்த அரசு நடத்திய விதம் சரியானதாக இல்லை. இதன் மூலம் உலக அளவில் புகழுக்குரியதாக மதிக்கப்படும் இந்திய ராணுவத்தின் கண்ணியம், கெளரவம் குலைந்து போயிருக்கிறது என்பதே உண்மை.
இந்த விவகாரத்தில் ராணுவத் தளபதி வி.கே.சிங் மீதும் குற்றம் சொல்ல இடமிருக்கிறது. இந்திய நாட்டின் கெளரவத்தையும் கண்ணியத்தையும், மானத்தையும் காக்கும் உயர் பொறுப்பில் உள்ள அவர், தாமே நேரடியாக பிரதமரைச் சந்தித்திருக்கலாம் அல்லது ராணுவத்திற்குள்ளாகச் செயல்படும் நடுவர் மன்றத்தை அணுகியிருக்கலாம். அதைவிடுத்து ஒரு பொதுமனிதனைப்போல உச்ச நீதிமன்றத்தை அணுகி, உலகம் முழுவதும் இந்தப் பிரச்னையைப் பேச வைத்திருப்பது அவர் இத்தனைக் காலம் வகித்த பதவியின் மீதான மரியாதைக்கு இழுக்கு.
மேலும், அவருக்கு ஒவ்வொரு முறை விருதுகள் வழங்கப்பட்டபோதும், பதவி உயர்வுகள் வழங்கப்பட்டபோதும், சான்றிதழ்களில் அவரது பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போதெல்லாம் இந்தத் தவறைத் திருத்துவதற்கு அவர் ஏன் முனைப்புக் காட்டவில்லை? ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு முன்புவரை இந்தப் பிரச்னையை அவர் ஏன் நீடிக்கவிட்டார்? இந்திய ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் தன்னுடைய பிறந்த தேதி விவகாரத்தில்கூட மெத்தனமாக இருந்திருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. அதைவிட அதிர்ச்சி இத்தனைக் காலமும் நமது பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதைப்பற்றிக் கவலைப்படாமல் இருந்திருக்கிறார்கள் என்பது. மக்களுக்கும் அரசியல்வாதிகள்மீது நம்பிக்கை குறைந்து வருகிறது. ராணுவத்துக்கும் அவநம்பிக்கை ஏற்படுமேயானால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக