செவ்வாய், ஜனவரி 24, 2012

தெருவில் நின்று மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய சீன அதிபர் ஜிண்டாவோ !

சீனாவில், நேற்று "டிராகன்' புத்தாண்டு கோலாகலமாகப் பிறந்தது. பீஜிங் உள்ளிட்ட நகரங்களில், கண்ணைக் கவரும் வாண வேடிக்கைகளுடன், மக்கள் உற்சாகமாக புத்தாண்டைக் கொண்டாடினர். சீனாவில், சூரிய சந்திர நாள்காட்டி நடைமுறையில் உள்ளது. சந்திரனைக் கொண்டு மாதங்கள் கணிக்கப்பட்டாலும், சூரியனை மையமாகக் கொண்டு, ஒரு மாதம் ஆண்டில் சேர்க்கப்படும் நடைமுறைக்கு, சூரிய சந்திர கணிப்பு என்று பெயர்.
இந்த அடிப்படையில், நேற்று சீனாவில் புத்தாண்டு பிறந்தது. இந்த புத்தாண்டின் சின்னமாக
டிராகன் குறிப்பிடப்படுவதால், இது "டிராகன்' புத்தாண்டு எனப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில், கண்கவர் வாண வேடிக்கைகளுடன், உற்சாகமாக புத்தாண்டு வரவேற்கப்பட்டது.
தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நடத்தப்படும் இந்த வாண வேடிக்கைகளை, ஒன்பது லட்சம் மக்கள் கண்டுகளிப்பர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, தியானன்மென் சதுக்கத்தின் தென் பகுதியில் உள்ள கியான்மென் வணிக வளாகத் தெருவில் நின்று கொண்டு, மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். திடீரென தெருவில் அதிபரைக் கண்ட மக்கள், இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர்.
தலைநகர் பீஜிங்கில், ஏழு போலீஸ் ஹெலிகாப்டர்கள் வான்வெளி மூலம், பாதுகாப்புக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தன. தொடர்ந்து ஏழு நாட்களுக்கு, இந்த ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பில் ஈடுபடும். பொதுமக்கள், போலீசார் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அடங்கிய ஒன்பது லட்சம் பேர் கொண்ட பாதுகாப்புப் படை, பல்வேறு மாவட்டங்கள், நகரங்களில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக