ஈரானில் இருந்து 20 சதவீதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் ஐரோப்பிய யூனியன், நேற்று அதற்குத் தடை விதித்துள்ளது. இத்தடை ஈரான் பொருளாதாரத்தை பாதிக்கும் என்றாலும் பெருமளவில் அதன் தாக்கம் இருக்காது.
ஈரானின் அணுசக்தி திட்டங்களை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. ஈரான் அணு ஆயுதங்களைத்
தயாரிப்பதாக அவை குற்றம் சாட்டுகின்றன. ஆனால், தனது அணுசக்தி ஆக்கபூர்வ செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாக ஈரான் கூறி வருகிறது.
இந்நிலையில், நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடந்தது. அதில், ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் தடை, இவ்வார மத்தியில் இருந்து நடைமுறைக்கு வரும். அதில் இருந்து, ஈரானுடன் எண்ணெய் இறக்குமதிக்குப் புதிய ஒப்பந்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது.
ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், வரும் ஜூலை 1ம் தேதியோடு காலாவதியாகி விடும். இதன் மூலம், ஈரானுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில், 20 சதவீதம் ஐரோப்பிய யூனியன் வாங்குகிறது. எனினும் பெரும்பாலான ஏற்றுமதி, ஆசிய நாடுகளைச் சார்ந்தே உள்ளது.
சீனா, 20 சதவீதமும், ஜப்பான் 17 சதவீதமும், இந்தியா 16 சதவீதமும், இத்தாலி 10 சதவீதமும், தென் கொரியா 9 சதவீதமும் பிற நாடுகள் 8 சதவீதமும் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. இந்த எண்ணெய்த் தடை மூலம், ஈரானின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றாலும் பெருமளவிலான தாக்கம் இருக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், இதன் தாக்கம் இந்தியா மீதும் இருக்குமா என நிருபர்கள் கேள்வி கேட்டபோது, "இத் தடை முழுக்க முழுக்க ஐரோப்பிய யூனியனுக்கானது. ஈரான் உடனான இந்திய நிலைப்பாட்டை ஐரோப்பிய யூனியன் எப்போதும் மதிக்கும். இதுகுறித்து, இந்தியா தான் முடிவெடுக்க வேண்டும்' என இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதர் ஜோவோ க்ராவின்ஹோ தெரிவித்தார்.
இதற்கிடையில், ஈரானின் எச்சரிக்கையை மீறி, அமெரிக்காவின் விமானம் தாங்கிப் போர்க்கப்பலான யு.எஸ்.எஸ்., ஆப்ரகாம் லிங்கன் கப்பல், நேற்று ஹோர்முஸ் நீரிணை வழியாக பஹ்ரைனுக்குச் சென்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக