சனி, ஜனவரி 21, 2012

அமெரிக்கா: தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டத்தால் திவால் ஆனது கோடக் கேமரா நிறுவனம் !

America's kodak company loss.புகழ் பெற்ற "கோடக்' புகைப்படக் கருவி (கேமரா) நிறுவனம், தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதால், திவால் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளது.
அமெரிக்காவின் "கோடக்' நிறுவனம், புகைப்படக் கருவி, படச் சுருள் ஆகியவற்றில் உலகப் புகழ் பெற்றது. நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த நிறுவனம், மோசமான
நிர்வாகம், போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாமை ஆகிய காரணங்களால், 2003 முதல் சிறிது சிறிதாக நொடிந்து கொண்டே வந்தது. கடந்த 2003 முதல், இதுவரை, தனது 13 படச் சுருள் மற்றும் புகைப்படக் கருவி தயாரிப்பு நிலையங்களை மூடிய இந்நிறுவனம், 47 ஆயிரம் ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பியது. ஒரு காலத்தில், சந்திரனில் காலடி வைத்த நீல் ஆர்ம்ஸ்டாங் கால்பதித்த காட்சியை வெளியிட, இந்த நிறுவன படச் சுருள் உதவி வரலாற்றில் இடம் பெற்றது.

இந்நிலையில் இந்நிறுவனம், அமெரிக்க அரசிடம், திவால் நோட்டீஸ் (சாப்டர் 11) சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள், தனிநபர்களிடம் வாங்கிய கடனை, இந்நிறுவனம் சிறிது கால அவகாசம் எடுத்துக் கொண்டு மெல்ல மெல்ல செலுத்தும். இந்த திவால் நோட்டீஸ், அமெரிக்காவில் இயங்கும் வர்த்தகத்திற்கு மட்டுமே என, கோடக் ஆசியா பிரிவின், சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் பி.என்.ரகுவீர் தெரிவித்தார்.

இந்தியாவில்...: இந்தியாவில் கோடக் நிறுவனத்தின் வர்த்தகம் நல்ல முறையில் இயங்கி வருவதால், வாடிக்கையாளர்களும், சில்லரை வியாபாரிகளும் இந்நிறுவனத்துடனான வர்த்தகத்தை, இப்போது உள்ளபடியே தொடரலாம் எனவும் உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக