நடுக்கடலில் கவிழ்ந்த கோஸ்டா கான்கோடியா கப்பலின் கேப்டன், பயணிகளை ஆபத்தில் விட்டுவிட்டு, கப்பலை விட்டு வெளியேறிய தகவலை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளன இரு இத்தாலியப் பத்திரிகைகள். கப்பலில் இருந்து வெளியேறி பாறைகளில் நின்றிருந்த கேப்டனை மீண்டும் கப்பலுக்கு செல்லுமாறு கடையோரக் காவற்படையினர் உத்தரவு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. அதிர்ச்சி அளிக்கும் இந்த உரையாடல்களை வெளியிட்டுள்ள இத்தாலியப் பத்திரிகைகள், இந்த உரையாடல்களின் ஒலிப்பதிவு தமக்கு எப்படிக் கிடைத்தது என தெரிவிக்கவில்லை. மீடியாவுக்கு தகவல் கிடைக்கும் சோர்ஸ் எது என்பதை வெளியிடத் தேவையில்லை என்பது இத்தாலியச் சட்டம்.
‘கப்பலை கைவிடும்’ உத்தரவை கேப்டன்தான் கொடுத்திருக்கிறார். ‘கைவிடும் உத்தரவு’ (order to abandon) என்பது, இனி கப்பலை காப்பாற்ற முடியாது என்ற நிலை வரும்போது கேப்டனால் கொடுக்கப்படுவது. இந்த உத்தரவு கொடுக்கப்பட்டால், மாலுமிகள் அதன்பின் கப்பலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு, பயணிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபடவேண்டும்.கப்பலின் கேப்டன் பிரான்செஸ்கோ ஷீட்டினோ தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
கோஸ்டா கான்கோடியா கப்பல் விஷயத்தில் இதிலும் ஏதோ மர்மம் இருப்பதாக எழுதியுள்ளது இத்தாலியப் பத்திரிகை Corriere della Sera.
அந்தப் பத்திரிகைக்கு கிடைத்த தகவலின்படி, ‘கைவிடும் உத்தரவு’ கேப்டனால் கொடுக்கப்படுவதற்கு 13 நிமிடங்களுக்கு முன்னரே, பயணிகளை வெளியேற்ற லைஃப்-போட்கள் கடலில் இறக்கப்படத் தொடங்கிவிட்டன. “இது எப்படிச் சாத்தியம்?” என்று கேள்வி எழுப்பும் பத்திரிகை, இதில் ஏதோ மர்மம் உள்ளது என்கிறது.
பலரது சந்தேகம், கப்பலைக் கைவிடும் உத்தரவை கேப்டன் கப்பலில் இருந்து கொடுக்கவில்லை என்பதே. கப்பல் மூழ்கப் போகின்றது என்று தெரிந்தவுடன் கேப்டன் தாம் தப்புவதற்காக ஒரு லைஃப்-போட்டை கடலில் இறக்கியிருக்கலாம். அதைப் பார்த்துவிட்டு மாலுமிகள் சிலர் மற்றைய லைஃப்-போட்களை கடலில் இறக்கத் தொடங்கியிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.
படகில் ஏறித் தப்பி கடற்கரையோரமாக உள்ள பாறைகளில் பாதுகாப்பாக நின்றவாறே “கப்பலை கைவிட்டுவிட்டு பயணிகளை வெளியேற்றுங்கள்” என்ற உத்தரவை கேப்டன் கொடுத்திருக்க வேண்டும். கப்பலில் இருந்த ஆயிரக் கணக்கான பயணிகளும் உயிர்தப்ப ஒரே நேரத்தில் முயற்சி செய்யும்போது தமக்கு ஒரு படகு கிடைக்காது போய்விடலாம் என நினைத்தே, கேப்டன் இவ்வாறு செய்திருக்கலாம்.
அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கும் விதத்தில் கடலோரக் காவல்படை அதிகாரி ஒருவர் கேப்டனுடன் பேசிய ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளது மற்றொரு இத்தாலியப் பத்திரிகை Il Fatto.
லிவோர்னோ என்ற இடத்திலுள்ள கடலோரக் காவல்படையின் கமான்டிங் அதிகாரி, கப்பலோடு ரேடியோ தொடர்புகளை மேற்கொள்ள செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. காரணம், கப்பலின் கம்யூனிகேஷன் ரூமில் ரேடியோவை ஆபரேட் பண்ண யாரும் இல்லை. கடலோரக் காவல்படை அதிகாரி, கப்பல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, கேப்டனின் செல்போன் இலக்கத்தை பெற்று, அதில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.
“கேப்டன்.. இன்னமும் எத்தனை பயணிகள் கப்பலில் உள்ளார்கள்?”00.32 மணிக்கு கேப்டன் தனது செல்போனில் பதிலளித்தார். அந்த விநாடியில் இருந்து அவரது உரையாடல் லிவோர்னோ கடலோரக் காவல்படை அலுவலகத்தில் பதிவாகியுள்ளது.
“200 அல்லது 300 பேர் இருக்கலாம்”
“பயணிகள் அளைவரும் பத்திரமாக உள்ளார்களா? உயிரிழப்புகள் உண்டா?”
“சரியாகத் தெரியவில்லை. நான் கப்பல் உரிமையாளர்களுடன் போனில் பேசினேன். 40 பயணிகளைக் காணவில்லை என்று அவர்கள் சொன்னார்கள்”
“உங்களுக்கே சரியாகத் தெரியவில்லை, ஆனால் தரையில் உள்ள கப்பல் உரிமையாளர்களுககு தகவல் தெரிகிறதா? இது எப்படி சாத்தியம்?”
பதில் இல்ல.
“கேப்டன்.. நீங்கள் கப்பலில்தானே உள்ளீர்கள்?”
“இல்லை.. இல்லை.. நான் கப்பலில் இல்லை. கப்பலை கைவிடும் உத்தரவு கொடுக்கப்பட்டு விட்டது.”
“என்ன? கப்பலில் நீங்கள் இல்லாமல் கப்பலை கைவிடும் உத்தரவு கொடுத்தீர்களா?”
“நான் உத்தரவு கொடுத்தேனா? இல்லை.. இல்லை.. ம்.. நான் இங்கே இருக்கிறேன்”
“இங்கே என்றால் எங்கே? கப்பலிலா?”
“இல்லை. வெளியே.. கடலில்.. பாறையில்..” அத்துடன் கேப்டன் தொடர்பை துண்டித்தார்.
மீண்டும் பல தடவைகள் அவரை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒரு வழியாக மீண்டும் ஒரு தடவை செல்போனை ஆன்ஸர் பண்ணினார். அப்போது நேரம், அதிகாலை 1.46
“நான் கப்பலின் கேப்டனுடன்தானே பேசுகிறேன்?”
“ஆம். கேப்டன்தான் பேசுகிறேன்”
“நீங்கள் இப்போது கப்பலில் இல்லை என்பது உண்மைதானே?”
“ஆம். கப்பலில் இல்லை. கப்பலை நான்…”
கேப்டனின் பேச்சை இடைவெட்டினார் கடலோரக் காவல்படை அதிகாரி. “கேப்டன் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். நீங்கள் இப்போது கப்பலுக்கு திரும்பிச் செல்ல வேண்டும். கப்பலில் இருந்து தொங்கும் கயிற்று ஏணி வழியாக மேலே ஏறிச் செல்லுங்கள். அங்கே நின்று மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யுங்கள்”
கேப்டனிடம் இருந்து பதில் இல்லை.
“அங்கே சென்று அங்கிருந்து எம்மை தொடர்புகொண்டு சரியாக எத்தனை பேர் கப்பலில் உள்ளனர் என்பதை எமக்கு தெரிவிக்க வேண்டும். எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள், எத்தனை குழந்தைகள் என்ற தெளிவான பிரேக்-டவுன் தரவேண்டும்”
“ஆனால் நான்.. நான்.. கப்பலுக்கு செல்வது..“
மீண்டும் இடைவெட்டினார் கடலோரக் காவல்படை அதிகாரி. “கேப்டன்.. கவனமாகக் கேளுங்கள்.. இது வேண்டுகோள் அல்ல.. கட்டளை. கப்பல் கைவிடப்படும் உத்தரவை கொடுத்து விட்டீர்கள். இப்போது நான்தான் கமாண்டர். நான் உத்தரவிடுகிறேன். உடனடியாக கப்பலுக்கு திரும்பிச் செல்லுங்கள். அங்கே ஏற்கனவே சில பயணிகள் இறந்துவிட்டார்கள்”
“எத்தனை பேர் இறந்து விட்டார்கள்?”
“ஹா! நீங்கள் எமக்கு சொல்ல வேண்டும் அதை! கப்பல் கேப்டனுக்கு உங்கள் கப்பலில் எத்தனைபேர் இறந்தார்கள் என்ற விபரத்தை நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. உடனடியாக கப்பலுக்கு திரும்புங்கள். எத்தனை பேர் அஙற்தார்கள் என்று பார்த்துவிட்டு எங்களுக்கும் சொல்லுங்கள்.”
பதில் இல்லை.
“கேப்டன்.. என்ன பதிலில்லை? என்ன செய்வதாக உத்தேசம்? இப்படியே வீடு செல்வதாக திட்டமா? உங்கள் கப்பலுக்கு திரும்புங்கள். உத்தரவை மீறினால் கடுமையான தண்டனைக்கு உள்ளாக நேரிடும். என்ன.. கப்பலுக்கு திரும்புகிறீர்களா?
“சரி.. சரி.. கப்பலுக்கு திரும்புகிறேன். அங்கிருந்து உங்களை தொடர்பு கொள்கிறேன்”
இத்துடன் உரையாடல் முடிகிறது. ஆனால், கேப்டன் கடைசிவரை கப்பலுக்கு திரும்பவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக