டெஹ்ரான்: ஈரானின் இளம் அணு விஞ்ஞானி முஸ்தஃபா அஹ்மதி ரூஷனின் கொலைக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பங்கினைக் குறித்த கடுமையான குற்றச்சாட்டை ஈரான் எழுப்பியுள்ளது.
ஈரான் மீது புலனாய்வு உளவு வேலைகளை துவங்க பிரிட்டனின் உளவு அமைப்பான எம்.ஐ-6-ன் தலைவர் ஜான் ஸாவெர் உத்தரவிட்ட பின் ரூஷன் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார் என பிரிட்டீஷ் வெளியுறவு அமைச்சகத்திற்கு அளித்த தூதரக கடிதத்தில் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
பிரிட்டனின் இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து ரூஷன் கொலையில் அவர்களுக்கு பங்கிருப்பது தெளிவாகிறது என அக்கடிதம் குறிப்பிடுகிறது. இதைப்போல அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏவுக்கு ரூஷனின் கொலையில் பங்கிருப்பது குறித்து நம்பத் தகுந்த ஆதாரம் கிடைத்துள்ளது என ஈரான் குற்றம் சாட்டுகிறது.
அதேவேளையில்,ரூஷனின் கொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவரக்கோரி பல்வேறு சர்வதேச அமைப்புகளை அணுகுவோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே,அணுசக்தி திட்டத்தின் பெயரால் ஈரான் மீது தடை விதிப்பதற்கான மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரானுடன் இஸ்ரேல் போருக்கு தயாராவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களை கண்காணிக்க ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்டக் குழு இம்மாதமோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ ஈரானுக்கு செல்லும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக