ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட ஆப்கானியர்களின் சடலங்கள் மீது சிறுநீர் கழித்த அமெரிக்கப் படையினர் நால்வரும் இனங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படையினர் நால்வரில் இருவர் அதிகாரிகளால் நேர்காணப்பட்டுள்ளனர். அவர்கள் கைதுசெய்யப்படவில்லை எனினும் அவர்கள் படையினருக்கு இழுக்கை ஏற்படுத்திய குற்றச்சாட்டை எதிர்நோக்குவதாகவும்
அமெரிக்காவின் சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் அமெரிக்க கடற்படையின் 'மரைன்ஸ்' எனும் பிரிவை சேர்ந்தவர்களாவர்.
இப்படையினர் நால்வரும் வடகரோலினா மாநிலத்தின் கேம்ப் லெஜுவன் எனும் மரைன்ஸ் முகாமை தளமாகக் கொண்ட இரண்டாவது மரைன்ஸ் ரெஜிமென்டின் 3 ஆவது பெற்றாலியனில் இருந்தவர்கள் என சி.என்.என். தெரிவித்துள்ளது. எனினும் இவர்களின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை
இம்முகாமில் சுமார் 40,000 படையினர் இருப்பதாகவும் 2 ஆவது மரைன்ஸ் படையணியின் 3 ஆவது பெற்றாலியனில் சுமார் 800 பேர் அங்கம் வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க கடற்படையின் சட்ட அமுலாக்கல் பிரிவு, இச்சம்பவம் தொடர்பான பிரதான விசாரணையை நடத்துகிறது. அமெரிக்க படை சட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் சர்வதேச போர்விதிகளை மீறியமை தொடர்பான ஆதாரங்களை அப்பிரிவு மதிப்பீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை மரைன்ஸ் படைப்பிரிவும் தனியான விசாரணையை நடத்துகிறது.
'இந்த வீடியோ வெளிவந்த விதம் அதன் உண்மைத் தன்மையை நாம் உறுதிப்படுத்தாத போதிலும், அதில் வெளிப்படுத்தப்பட்டுள் காட்சிகள் எமது எமது ஆழமான பெறுமானங்களுக்கு இசைந்தவையாக இல்லை. அவை மரைன்ஸ் படையினரின் பாத்திரத்தை பிரதிபலிப்பதாகவும் இல்லை' என மரைன்ஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இக்கிரிமினல் விசாரணைகளின் மூலம், மேற்படி படையினர் போர்ச் சட்டங்களை மீறியுள்ளனரா என ஆராயப்படு வாய்ப்புள்ளது என அமெரிக்க படைத்தலைமையகமான பென்டகனின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சடலங்கள் மீது சிறுநீர் கழித்த நடவடிக்கைக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய், அமெரிக்க ராஜங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன், பாதுகாப்புச் செயலர் லியோன் பனேட்டா, முன்னாள் உப ஜனாதிபதி ஜோன் மெய்கெய்ன் உட்பட அமெரிக்க, ஆப்கானிஸ்தான் பிரமுகர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக