சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸிலிருந்து ஒரு சத்தமும் வராமல் பார்த்துக் கொள்ளும் நோக்கில் கேரளாவைச் சேர்ந்த ஒருவரை மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமித்துள்ளது காங்கிரஸ் மேலிடம்.
நூறாண்டுகளைக் கடந்து தடபுடலாக ஓடிக் கொண்டிருக்கும் தேசியக் கட்சியான காங்கிரஸ், மாநிலங்களில் உள்ள தனது கட்சி நிர்வாகத்தைக் கண்காணிக்க மேலிடப் பொறுப்பாளர் ஒருவரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் நியமிக்கும். இவர்கள் மாநில கட்சி நிர்வாகத்தைக் கண்காணித்து வருவார்கள். கோஷ்டிப் பூசல் உள்ளிட்ட விவகாரங்களில் தலையிட்டு பஞ்சாயத்து செய்வார்கள். மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த பூசாரிகள் மூலமாகத்தான் மேலிடத் தலைவர்களை அணுக முடியும், பேச முடியும், கருத்துக்களைத் தெரிவிக்க முடியும்.
மாநில காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸுக்கென தனித் தனி பொறுப்பாளர்கள் இருப்பார்கள்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக இதுவரை ஆந்திராவைச் சேர்ந்த அகமது இருந்து வந்தார். தற்போது இவரைத் தூக்கி விட்டனர். அவருக்குப் பதில் கேரளாவைச் சேர்ந்த எம்.லிஜு என்பவரை நியமித்துள்ளனர். இது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் இடையே கடும் மோதல், பூசல் நிலவி வரும் நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒருவரை தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமித்திருப்பது காங்கிரஸ் மேலிடம் வேண்டும் என்றே தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் செய்துள்ளதாக பலரும் கருதுகிறார்கள்.
தமிழக இளைஞர் காங்கிரஸார், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவுக்கு எதிராக நடந்து வருவதைத் தடுத்து ஒடுக்கும் வகையில்தான் லிஜுவை நியமித்துள்ளதாக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு கருத்து நிலவுகிறது. இந்த லிஜு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருக்கிறார்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தி்ல கேரளாவைக் கண்டித்து கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி அதை பிரதமரிடம் கொடுக்கவுள்ளனர்.
இந்த நிலையில் லிஜுவை பொறுப்பாளராக நியமித்துள்ளதால் அவர் மூலம்தான் இந்த கையெழுத்தை கொண்டு போய் பிரதமரிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடமும் கொடுக்க வேண்டும். ஆனால் கேரளாவைச் சேர்ந்தவரான லிஜு எப்படி துணைக்கு வருவார் என்று கேட்கிறார்கள் இளைஞர் காங்கிரஸார்.
இதை விட உச்சமாக வருகிற 25ம்தேதி சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது. அதில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முரண்டு பிடித்து வரும் கேரளாவைக் கண்டித்து தீர்மானம் போடும் ஐடியாவும் உள்ளது. லிஜுதான் இந்தக் கூட்டத்திற்கு முன்னிலை வகிக்கவுள்ளாராம். அவர் எப்படி தனது மாநிலத்திற்கு எதிரான தீர்மானத்தை அனுமதிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மொத்தத்தில் தமிழக காங்கிரஸிலிருந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட வரக் கூடாது என்ற குயுக்தியான எண்ணத்தில்தான் லிஜுவை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
தமிழக காங்கிரஸைப் பொறுத்தவரை மூத்த தலைவர்கள் யாரும் கேரளாவுக்கு எதிராக பேசக் கூடாது என்று வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே ஒரு பேச்சு அடிபடுகிறது. இதன் எதிரொலியைத்தான் சமீபத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளாவை விமர்சித்துப் பேசி பின்னர் பல்டி அடித்தபோது அனைவரும் பார்த்தார்கள். இந்த நிலையில், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக கேரளாவைச் சேர்ந்த ஒருவரை நியமித்திருப்பதன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகள் எப்படி இருந்தால் என்ன என்ற உணர்வில் காங்கிரஸ் மேலிடம் இருப்பதாக கொந்தளிக்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக