புதன், ஜனவரி 18, 2012

ஐயப்ப பக்தர் கொலை: சபரிமலையில் வென்னீர் அபிஷேகம்!

தமிழகத்திலிருந்து சபரிமலை சென்ற ஐயப்பப் பக்தர், டீக்கடைக்காரர் வீசிய வென்னீரில் வெந்து பரிதாபமாக பலியானார். இச்சம்பவத்திற்குத் தமிழகத்தில் கேரள அரசுமீது கடும் விமர்சனம் கிளம்பியுள்ளது.
சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சாந்தவேலு. இவர் சபரிமலைக்கு மாலையிட்டுச் சென்றார். கடந்த 8 ஆம் தேதி பம்பை நதி அருகே தேநீர் அருந்த சென்றபோது கடைக்காரருக்கும் அவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அக்கடைக்காரர் கோபத்தில் ப்ராய்லரில் கொதித்துக் கொண்டிருந்த வென்னீரை எடுத்து சாந்தவேலு
மீது வீசியுள்ளார்.
இதில் உடல் முழுவதும் வெந்த நிலையில், சாந்தவேலு சிகிட்சைக்காக கோட்டயம் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிட்சையில் போதிய முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில், சாந்தவேலுவின் மனைவியும் உறவினர்களும் அவரைச் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சாந்தவேலு சிகிட்சை பலனின்றி நேற்று(திங்கள் கிழமை) பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தமிழகத்தில் கேரள அரசுமீது பலத்த விமர்சனம் எழுந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்குப் பின்னர் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பப் பக்தர்கள்மீது ஆங்காங்கே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சபரிமலைக்குச் செல்லும் தமிழக ஐயப்பப் பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்திருந்தது. மேலும், மகரஜோதியைக் காண ஆயிரக்கணக்கில் ஐயப்பப்பக்தர்கள் சபரிமலையில் குவிந்து கொண்டிருந்த நேரத்தில், பாதுகாப்புக்காக ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு அறிவித்தது. அப்படியிருக்கையில், ஒரு டீக்கடையில் தகராறு நடந்தது எந்த ஒரு காவலரின் கவனத்துக்கும் வராமலா இருந்தது என்ற கேள்வியும் இது தொடர்பாக இதுவரை கேரள அரசு எந்த ஒரு வழக்கும் ஏன் பதிவு செய்யவில்லை என்ற கேள்வியும் தமிழகத்தில் எழுப்பப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக