வெள்ளி, ஜனவரி 13, 2012

துபாய் போன சர்தாரி பாதியிலேயே திரும்பினார்-முஷாரப்பும் வருகிறார் !


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெரும் அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் நேற்று திடீரென துபாய் புறப்பட்டுச் சென்ற அதிபர் ஆசிப் அலி சர்தாரி இன்று தனது துபாய் பயணத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்பினார். இதற்கிடையே, பாகிஸ்தானில் தனது ஆட்சி போய் சர்தாரி தலைமையில் புதிய ஆட்சி அமைந்ததும் நாட்டை
விட்டு வெளியேறிய முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப்பும் பாகிஸ்தான் திரும்புகிறார்.


பாகிஸ்தானில் பிரதமர் கிலானிக்கும், ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது. யார் பெரியவர் என்ற இந்த சண்டையில் தற்போது ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐயின் கையே ஓங்கியுள்ளது. எனவே ராணுவப் புரட்சி வெடிக்குமோ என்ற அச்சம் பாகிஸ்தான் மக்களிடையே நிலவுகிறது. இருப்பினும் ராணுவத் தளபதி கயானிக்கு உடனடியாக ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென நேற்று சர்தாரி துபாய்க்குப் புறப்பட்டு்ப போனார். இதனால் அவர் நாட்டை விட்டு தப்பி ஓடியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் கல்யாணம் ஒன்றில் பங்கேற்பதற்காகப் போயுள்ளாக அதிபர் மாளிகை தகவல்கள் தெரிவித்தன.யாருக்குக் கல்யாணம் என்பதை அவர்கள் சொல்லவில்லை.

இந்த நிலையில் தற்போது சர்தாரி மீண்டும் இஸ்லாமாபாத் திரும்பியுள்ளார். இதுகுறித்து சர்தாரியின் செய்தித் தொடர்பாளர் பர்கதுல்லா பாபர் கூறுகையில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் அதிபர் சர்தாரி தலைநகர் இஸ்லாமாபாத் திரும்பினார் என்று தெரிவித்தார்.

கிலானிக்கு மட்டுமல்லாமல் சர்தாரிக்கும் கூட பாகிஸ்தானில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சர்தாரி விலக வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் கிலானிக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இடையே பூசல் வெடித்துள்ளது. முஷாரப் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்காமல் மெத்தனம் காட்டி வரும் கிலானி, நேர்மையானவர் அல்ல என்று சுப்ரீம் கோர்ட் கடுமையாக கண்டித்துள்ளது. இதனால் அவரும் பெரும் சிக்கலில் உள்ளார்.

முஷாரப்பும் வருகிறார்!

இந்த நிலையில் முஷாரப் மீண்டும் நாடு திரும்பவுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கராச்சியில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய பேரணியின் போது துபாயில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் முஷாரப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பாகிஸ்தானுக்கு இப்போது மாற்றம் தேவைப்படுகிறது. எனவே நான் மீண்டும் அரசியலுக்கு வருவேன்.

நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். ஜனவரி 27 முதல் 30ம் தேதிக்குள் என்னை கராச்சியில் நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்கள் முன் நான் வரவுள்ளேன்.

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவேன். கைபர்-பக்துன்க்வாவிலிருந்து நான் போட்டியிடுவேன்.

வெளிநாட்டுக்கு நான் தப்பி ஓடவில்லை. நன்றாகவே இருக்கிறேன். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இப்போது பாகிஸ்தான் மக்களுக்காக நான் மீண்டும் தாயகம் திரும்பவுள்ளேன். பழைய முகங்களைப் பார்த்து மக்கள் சலித்துப் போய் விட்டனர். அவர்களுக்கு புதுமுகம் தேவைப்படுகிறது, மாற்றம் தேவைப்படுகிறது. அதை நான் கொடுப்பேன்.

என்னைப் பார்த்து யாரும் பயப்படத் தேவையில்லை. நான் யாருக்கும் அஞ்சாதவன். எந்த நிலையாக இருந்தாலும் அதைச் சந்திக்க நான் தயார். நான் பாகிஸ்தான் வருவது உறுதி என்றார் முஷாரப்.

ராவில்பிண்டியைச் சேர்ந்த ஒரு கோர்ட் கடந்த ஆண்டு முஷாரப்பை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவித்தது. பெனாசிர் பூட்டோ வழக்கில் அவரது பெயர் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டது. தற்போது அவர் நாடு திரும்பினால் உடனடியாக கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படி எதுவும் நடந்து விடக் கூடாது என்பதற்காகவே ராணுவத்தின் மூலமாக முறைமுகமாக பாகிஸ்தான் அரசுக்கு முஷாரப் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக