வெள்ளி, ஜனவரி 13, 2012

தமிழர்களின் தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை.. மறைக்கப்பட்ட வரலாறு !


Devikulamதேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும். இதற்காக போராட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பிரச்சினை மீண்டும் வெடிக்க ஆரம்பித்துள்ளது. 

சரி, தேவிகுளம், பீர்மேடு குறித்து வரலாறு என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போமா...

தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் அனைத்தும் பாண்டிய மன்னனின் இறையாண்மைக்கு உட்பட்டு மதுரை நாயக்கர்களின் அதிகார வரம்புக்குள் 1889 வரையிலும் இருந்தது. எனவே, இந்த பகுதிகள் அனைத்தும் 1889 க்கு முந்தைய காலம் வரையிலும் திருவிதாங்கூருக்குச் சொந்தமானதாக இருந்ததில்லை என்பதே வரலாறுகள் கூறுகின்ற உண்மை.

வரலாற்று ரீதியாக பார்க்கும் போது சேர அரசர்கள் ஆண்ட பகுதிதான் இன்றைய கேரளா.சேரர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் சிறு, குறு சமஸ்தானங்களாக அது சிதருண்டு போயுள்ளது. கி.பி 12ம் நூற்றாண்டில் இறுதியில் தற்போதைய பீர்மேடு தாலுகாவையும், கூடலூரையும் உள்ளடக்கி பூஞ்சாறு அரச வம்சம் ஆளத்தொடங்கியுள்ளது.

பூனையார் தம்பிரான் அரசு என்று தமிழில் அழைக்கப்பட்ட அந்த அரசு பாண்டிய மன்னன் குலசேகரன் என்பவரால் நிறுவப்பட்டுள்ளதாக வரலாற்று உண்மைகள் தெரிவிக்கின்றன. பூஞ்சாறு மன்னர் ஆண்ட பகுதிகள் 19ம் நூற்றாண்டின் இறுதியில் பீர்மேடு, தேவிகுளம் மற்றும் உடும்பன்சோழா போன்ற பகுதிகள் கேரளாவின் இடுக்கி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.கம்பம், உத்தமபாளையம், போடி தாலுகா தமிழகத்துடனும் இணைக்கப்பட்டன.

1886 ம் ஆண்டு தமிழர்களின் ஆளுமையில் இருந்த பீர்மேடு தாலுகாவில் முல்லைப்பெரியாறு அணைக் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. 

இந்த வரலாற்று உண்மையை மறைத்து கேரள அரசின் இணையதளத்தில் 16 ம் நூற்றாண்டிலேயே கேரளாவுடன் பூஞ்சாறு அரசு கேரளாவுடன் இணைந்து விட்டது போல குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டிற்குட்பட்ட பத்மநாபபுரத்தை தலைமையாக கொண்டு ஆண்ட திருவிதாங்கூர் சமஸ்தானம் தனது தலைமை இடத்தை 1756ல் திருவனந்தபுரத்திற்கு மாற்றியுள்ளது. இதன் பின்பு 1866க்கு மேல்தான் பூஞ்சாறு அரசர்களின் நிலத்தை கையகப்படுத்த தொடங்கியுள்ளது. 

சேரநாட்டின் ஒரு பகுதியே திருவிதாங்கூர், திருவிதாங்கூரில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்ட காரணத்தால் மார்ஷல் நேசமணி, திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகளை மீட்க "திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை" உருவாக்கி, தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, பீருமேடு, தேவிகுளம், சித்தூர் ஆகிய 9 பகுதிகளையும் தாய்த் தமிழகத்தோடு இணைக்க வேண்டுமென்று போராடினார்.

5.11.1949 ல் ம.பொ.சி. தலைமையில் நடைபெற்ற வடஎல்லை மாநாட்டில் நேசமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் வடவேங்கடம் அதாவது திருப்பதி முதல் குமரி வரை உள்ள பகுதிகளை இணைத்து "தமிழ் மாகாணம்" அமைக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தமிழர்களால் உயர்ந்த பீர்மேடு

இதே காலக் கட்டத்தில் தேவிகுளம், பீர்மேடு தமிழர்களை மலையாள அரசு அடக்கி ஒடுக்கியது. 434 தமிழர்களையும் 20 தமிழ் பெண்களையும், இளைஞர்களையும் ஒரே சிறையில் அடைத்து துன்புறுத்தியது.

இந்த மக்களின் துன்பங்களைப்பற்றி மார்ஷல் நேசமணி குறிப்பிடுகையில் தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்கள் இன்று கண்ணுக்கினிய தோட்டங்களாக மிளிருவதற்கு தமிழன் உழைப்பும், அந்த உழைப்பின் கடுமையால் கொட்டப்பட்ட வியர்வை முத்துக்களுமே காரணமாகும். மனிதன் செல்ல முடியாத இந்த மலைமுகடுகளில் ஏல விவசாயத்தை வளர்த்த பெருமை முழுதும் தமிழனுக்கே உரியதாகும் என்று பேசினார். நேசமணி குறிப்பிட்ட தாலுகாக்களில் தமிழர்களே அதிக அளவில், அதாவது பெரும்பான்மைக்கும் அதிகமான அளவில் வாழ்ந்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை

நேசமணியின் நாடாளுமன்ற பேச்சில், பூஞ்சாறு மன்னர் பாண்டிய மரபினர். அன்னார் ஒப்பமிடுகின்ற போது மீனாட்சி சுந்தரம் என்றே கையொப்பமிடுவர். மன்னாடியார் என்று அழைக்கப்படுகின்ற நாட்டுப் பிரதானிகளைக் கொண்டு நாட்டு வரி தண்டினான் என்றும் அத்தகைய வரி வசூலிக்கும் பற்றுச்சீட்டில் மதுரை மீனாட்சி துணை என்ற முத்திரை பதிக்கப்பட்டுள்ளதாகக் காணப்படுகிறது. ஆகையால், இந்த, தேவிகுளம், பீருமேடு பகுதிகள் அனைத்தும் பாண்டியனின் இறையாண்மைக்கு உட்பட்டு மதுரை நாயக்கர்களின் அதிகார வரம்புக்குள் 1889 வரையிலும் இருந்தது.

எனவே, மேற்படி பகுதிகள் அனைத்தும் 1889 க்கு முந்தைய காலம் வரையிலும் திருவிதாங்கூருக்குச் சொந்தமானதாக இருந்ததில்லை என்பதே வரலாறுகள் கூறுகின்ற உண்மை, மாடோன் கே.டி.கெச் பி. தேவன் கம்பெனியாரின் முன்னோர்கள் 1879 ல் பூஞ்சாற்று மன்னருடன் செய்து கொண்ட முதல் உடன் படிக்கையின் அடிப்படையில் இப்பகுதிகள் அவர்களது அனுபவத்திற்கு வந்துள்ளது என்று சுட்டிக்காட்யுள்ளார் மார்ஷல் நேசமணி.

மேலும் அவர் கூறுகையில்,பெரியார் நீர்த்தேக்கத் திட்டத்திற்காக பிரிட்டிஷ் – இந்திய நடுவண் அரசு செயலாளர் திருவிதாங்கூர் மன்னருக்காக ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளார். 1889-ல் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, குத்தகை உரிமையின் கெடுவை நீட்டித்த வேளையில் அது திருவிதாங்கூர் மன்னருக்கு சாசனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதற்கு முன்னால் இப்பகுதி தமிழகத்துடன் இருந்தது என்பது தெரிகிறது.

திருவிதாங்கூர் மன்னர் இப்பிரதேசங்களை பூஞ்சாறு மன்னரிடமிருந்து நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் பெற்றிருக்கிறார். இப்பிரதேசங்களுக்கு வந்துபோக மதுரை, மதுரை மாவட்டத்திலுள்ள தேவாரம், கூடலூர், போடிநாயக்கனூர், கம்பம், சிவகிரி போன்ற கணவாய்கள் வழியாக மட்டுமே வந்தடைய முடியும் என்று கூறியுள்ளார்.

பெரியார் அணைபற்றி அவர் கூறும்போது, பெரியாறு நீர்த்தேக்கத்திற்கு 13 சதுர மைல்கள் தண்ணீர் கொள்ளளவும் 305 சதுர மைல்கள் தண்ணீர் பிடிப்புப் பகுதியும் உண்டு. இப்பகுதிகள் சென்னை மாநிலத்திற்கு மிகவும் தேவையாகிறது. ஏனெனில் பெரியாறு நீர்த்தேக்கத்தினால் மதுரை மாவட்டத்திலுள்ள 1,90,000 ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கிறது. பெரியாற்றுத் தண்ணீரைப் பயன்படுத்தி பெரியகுளம் அருகில் ஒரு நீர்மின் நிலையமும் நிறுவுவதற்கான திட்டத்தை சென்னை மாகான அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்காக பெரியகுளத்தில் ஒரு கால்கோள் விழா ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டது என்று 1955 டிசம்பர் 15ஆம் நாள் நேசமணி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

திருவிதாங்கூர்(கேரளம்) தமிழர் போராட்டம் நடைபெற்ற போது, கேரள அரசியல்வாதிகள் ஒன்றாக இணைந்து நின்றனர். ஆனால் தமிழக மக்களிடமிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் நேசமணி 9 தாலுகாக்களுக்காகவும் பெரியாறு அணைக்காகவும் வாதாடியபோது எல்லா கேரள எம்.பி.க்களும் எதிர்த்தனர். ஆனால் தமிழகத்திலிருந்து ஒரு எம்.பி.கூட ஆதரவு காட்டவில்லை.

தமிழனின் கைவிட்டுப்போன பகுதிகள்

எல்லைக் கமிஷன் மூவரில் ஒருவராக சர்தார் கே.எம். பணிக்கரை இந்திய அரசு நியமித்தது. இவர் ஒரு மலையாளி, மலையாளிகளுக்கு சாதகமாகவே நடந்தார். மேற்கூறிய காரணங்களினால் தமிழகத்தோடு 5 தமிழ்ப் பகுதிகளே இணைந்தன (தோவாளை, அகஸ்தீஸ் வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை), முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கமும் நம்மை விட்டு கேரளாவுக்குச் சென்றது.

முல்லைப் பெரியாறு தண்ணீர் பிரச்சினை, நெய்யாறு தண்ணீர் பிரச்சினை தீர வேண்டுமானால் தென் எல்லைக் காவலன் நேசமணி கேட்ட ஒன்பது தாலுகாக்களுக்கு உட்பட்ட தேவிகுளம், பீருமேடு, நெய்யாற்றின் கரை, சித்தூர், செங்கோட்டையில் பாதி ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க கட்சி சார்பு நிலையின்றி எல்லா தமிழர்களும் ஒன்றிணைந்து போராடி மேலே கூறிய நான்கரை தாலுகாக்களையும் தமிழகத் தோடு இணைத்தால் மட்டுமே தமிழகத்தின் உயிர்ப் பிரச்சினையாகிய தண்ணீர் பிரச்சினை நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக