தூத்துக்குடி பெண் டாக்டர் கொலையில் 8பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி
3-வது மைல் பகுதி காமராஜர் நகரை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி டாக்டர் சேதுலட்சுமி. தூத்துக்குடி இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் தலைமை டாக்டராக பணியாற்றி வந்த இவர் தனது வீட்டின் முன்பகுதியில் தனியாக ஆஸ்பத்திரியும் நடத்திவந்தார்.
இந்நிலையில் கடந்த 2-ந்தேதி இரவு தனது ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு டாக்டர் சேதுலட்சுமி சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். அப்போது ஆஸ்பத்திரிக்குள் புகுந்த ஒரு கும்பல் டாக்டர் சேதுலட்சுமியை கத்தியால் வெட்டியும், சரமாரியாக குத்தியும் படுகொலை செய்தது. ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலைக்கான காரணம் குறித்து நெல்லைசரக போலீஸ் டி.ஐ.ஜி. வரதராஜூ, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாநகர ஏ.எஸ்.பி. சோனல்சந்திரா, தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அன்னராஜ், மகாராஜன் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் டாக்டர் சேதுலட்சுமி யின் கொலைக்கான காரணம் தெரியவந்தது.
தூத்துக்குடி ஆவுடையார்புரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான மகேஷ், தனது கர்ப்பிணி மனைவி நித்யாவும், அவளது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்ததற்கு சிகிச்சைஅளித்த டாக்டர் சேதுலட்சுமி தான் காரணம் என்று நினைத்து தனது கூட்டாளிகளுடன் வந்து கத்தியால் சரமாரியாக வெட்டியும், குத்தியும் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து ரமேஷ் மற்றும் அரவது கூட்டாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படைபோலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் மகேஷ், அவரது நண்பர்கள் குருமுத்து, ராஜா, அப்பாஸ் ஆகிய 4பேரும் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இக்கொலையில் மேலும் 5பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இவர்கள் 5பேரும் தான், 3ஆட்டோக்களில் கொலையாளிகளை அழைத்துச் சென்றுள்ளனர். ஆகையால் அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடினர். இந்தநிலையில், அவர்களில் தூத்துக்குடி ஆவுடையார்புரத்தை சேர்ந்த ஆறுமுகம், வெற்றிவேல் என்ற சாமுண்டி, டூவிபுரத்தை சேர்ந்த லட்சுமணன், வெள்ளையன் ஆகிய 4பேரையும் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கொலையாளிகளை அழைத்துச்செல்ல பயன்படுத்தப்பட்ட 3ஆட்டோக்களை போலீசார் பறிமுதல்செய்தனர். நேற்று கைது செய்யப்பட்ட 4 பேரும் ரமேஷ் உள்ளிட்ட 3பேரை அழைத்துக்கொண்டுதான் வந்தோமே தவிர, அவர்கள் டாக்டரை கொலை செய்யப்போவது தங்களுக்கு தெரியாது என்றும், தங்களுக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை எனவும் கூறியிருக்கிறார்கள்.
இருந்தபோதிலும் கொலையாளிகளை அழைத்துவந்ததால், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வழக்குப்பதிந்து ஆறுமுகம், வெற்றிவேல், லட்சுமணன், வெள்ளையன் ஆகிய 4பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்த ஆட்டோடிரைவரான மாரிமுத்து என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். இதன் மூலம் டாக்டர் சேதுலட்சுமி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 9பேரும் கைது செப்பட்டு விட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக