புதன், பிப்ரவரி 01, 2012

அமெரிக்காவின் அணுமின் நிலையத்தில் திடீர் கோளாறு?


 திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்திலுள்ள அணுஉலையின் செயல்பாடு திங்கள்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டது. அணு உலையைக் குளிர்விப்பதற்காகவும், அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும் டர்பைன் பகுதியில் இருக்கும் நீராவி வெளியேற்றப்பட்டு வருகிறது என்று இந்த அணுஉலையை பராமரித்து வரும் எக்செலான் என்கிற தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சிகாகோ நகரில் இருந்து சுமார் 153 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பைரோன்
பகுதியில் செயல்பட்டுவரும் அணுமின் நிலையத்திலுள்ள இரண்டாவது அணுஉலையில் இந்தக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது.

 அணு உலைக்குச் செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து, டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

 டர்பைன் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீராவியில் குறைந்த அளவு கதிரியக்கத் தன்மை கொண்ட டிரிடியம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். டிரிடியம் என்பது ஹைட்ரஜனின் கதிரியக்கம் கொண்ட வடிவமாகும்.

 "வழக்கத்துக்கு மாறான சம்பவம்' என்று அமெரிக்க அணுஉலை ஒழுங்காற்று ஆணையம் இதைக் குறிப்பிட்டுள்ளது.

 அணுஉலை விபத்து தொடர்பான நான்கு வகையான அவசர நிலைகளில் இது கடைசி வகை என்றும் வரையறுத்திருக்கிறது.

 இந்தச் சம்பவத்தால் பெரிய அளவில் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்றாலும், அணு உலையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும், அணு உலையைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்று அணுஉலையைப் பராமரிக்கும் எக்செலான் நிறுவனம் மற்றும் மத்திய அரசின் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, அணுமின் நிலையத்தில் ஸ்விட்ச்கள் உள்ள அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின் உலையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக எக்செலான் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.

 டர்பைன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது என்றாலும், அதை குளிர்விக்க வேண்டியது அவசியம் என்று அணு ஒழுங்காற்று ஆணைய செய்தித் தொடர்பாளர் விக்டோரியா மிட்லிங் தெரிவித்தார்.

 இந்தச் சம்பவம் குறித்து அணு உலை அமைந்திருக்கும் ஓஜில் மாவட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டதாக அப்பகுதி அவசரநிலை மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் கேண்டேஸ் ஹம்ப்ரே கூறினார். பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக