மாலே: மாலத்தீவு நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆட்சியில் பங்கேற்கும் வகையிலான தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இப்புதிய அரசில் பதவி விலகிய நஷீத்தையும் இடம்பெறச் செய்வதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. மாலத்தீவு அதிபராக இருந்த நஷீத்துக்கு எதிராக ராணுவத்தின் ஒருபிரிவும் அந்நாட்டின் காவல்துறையும் எதிர்க்கட்சியினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நஷீத் பதவி விலக நேரிட்டது. தம்மை துப்பாக்கி முனையில் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக எழுதி வாங்கிக் கொண்டதாக நஷீத் கூறிவருகிறார்.
மேலும் நாட்டில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். நஷீத்துக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில் அவரது மனைவியும் மகள்களும் இலங்கைத் தலைநகர் கொழும்பில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
நாட்டின் புதிய அதிபராக துணை அதிபராக இருந்த ஹசன் வகீத் பொறுப்பேற்றார்.
இருப்பினும் நஷீத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து புதிய அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது வன்முறையாக வெடிக்கக் கூடிய நிலைமை உருவாகி வருகிறது.
இந்நிலையில் இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவு மாலத்தீவு என்பதால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அங்கு அமைதியை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன.
இந்திய சிறப்புப் பிரதிநிதியாக சென்ற வெளிவிவகாரத்துறை அதிகாரி கணபதி, அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ராபர்ட் பிளேக் உள்ளிட்டோர் பதவி விலகிய நஷீத் மற்றும் மாலத்தீவு அரசியல் கட்சித் தலைவர்களிடையே கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மாலத்தீவில் தொடர்ந்து அமைதி நிலவ வேண்டுமெனில் அனைத்து அரசியல் கட்சியினரும் பங்கேற்கக் கூடியதான தேசிய அரசாங்கத்தை அமைப்பதுதான் சிறந்த தீர்வாக இந்தியாவும் அமெரிக்காவும் முன்வைக்கின்றன.
மாலத்தீவில் புதிய தேசிய அரசாங்கம் அமையுமா? அல்லது மீண்டும் தேர்தல் நடத்தக்கூடிய நிலைமை ஏற்படுமா? என்பது எதிர்வரும் நாட்களில் தெரியவரும்.
இதனிடையே நஷீத் பதவி விலக நேர்ந்தது தொடர்பாக இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றன.
அமைச்சரவை விஸ்தரிப்பு
இதற்கிடையே, புரட்சிக்குப் பின்பு பதவி ஏற்றுள்ள ஹஸன் வகீத் தலைமையிலான புதிய அரசின் அமைச்சரவை இன்று விஸ்தரிக்கப்படுகிறது. புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக