நெல்லை: கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி அணுஉலைகளுக்கு எதிரான அமைப்பினர் பாளையங்கோட்டையிலிருந்து பேரணியாக சென்றனர்.கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் இடிந்தகரை கிராமத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ்- திமுக, பிஜேபி தவிர, பிற கட்சிகள் அனைத்தும் ஆதரவாக உள்ளன.
இந்த நிலையில் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நேற்று பேரணி மற்றும் நூதன பிரசாரம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக ஆட்டம் ஆடி, பாடல்களும் பாடினர். மேலும் மத்திய மந்திரி நாராயணசாமி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரது கருத்துக்களை விமர்சித்து நாடகமும் நடித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ராமசாமி கோவில் திடலை அடைந்தனர். அங்கிருந்து வேன்கள் மூலம் அவர்கள் கூடங்குளம் நோக்கி புறப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக