வியாழன், பிப்ரவரி 09, 2012

கர்நாடக சட்டசபையில் செல்போனில் ஆபாச படம் எதிரொலி: தமிழக சட்டசபையில் செல்போனுக்கு தடை !

 சென்னை: கர்நாடக சட்டசபையில் பாஜக அமைச்சர்கள் 3 பேர் செல்போனில் ஆபாச படம் பார்த்ததன் எதிரொலியாக தமிழக சட்டசபையில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் அமைச்சர்கள் 3 பேர் ஆபாச படம் பார்த்து சிக்கி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சட்டசபையில் செல்போனு்ககு தடை விதிக்க நேற்றைய அவைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியே எம்.எல்.ஏ.க்கள் ஏதாவது அவசரமாக தொலைபேசியில் பேச வேண்டுமென்றால் அவர்களின் வசத்திக்காக லாபியில் 10க்கும் மேற்பட்ட பொது தொலைபேசிகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

தற்போது சட்டசபையில் உள்ள உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் புதுமுகங்கள். அவர்கள் சட்டசபைக்கு வருகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை எடுத்து வருகின்றனர். கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் செல்போன்கள் ஒலித்து பேரவைத் தலைவர் டி. ஜெயகுமார் எச்சரித்த சம்பவங்களும் நடந்துள்ளன. இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவும் கூட அறிவுறுத்தியுள்ளார்.

அதே சமயம் மூத்த உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் சட்டசபைக்கு வருவதற்கு முன்பு தங்கள் செல்போன்களை உதவியாளர்களிடமோ, வாகன ஓட்டுநர்களிடமோ கொடுததுவிட்டு வருகின்றனர். புதுமுகங்கள் மட்டுமே செல்போனுடன் சட்டசபைக்குள் வருகின்றனர். சட்டசபை நடவடிக்கைகளை செல்போனில் படம் எடுத்ததாக திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா பேரவையில் இருந்து 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது போன்றும், கர்நாடக சட்டசபையில் நடந்தது போன்றும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்போனுக்கு தடைவிதிக்கப்படவிருக்கிறது.

வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் செல்போன் தடைக்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் டி. ஜெயக்குமார் வெளியிடுவார் என்றும், அந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரவிருப்பதாகவும் தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக