வியாழன், பிப்ரவரி 09, 2012

மிரட்டும் மின்வெட்டு : கோவையில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் !

 கோவை : தொடர் மின்வெட்டை கண்டித்து கோயம்புத்தூர் தொழிற்சாலைகளில் மூன்று நாட்கள் கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தில் சிறுதொழில் நிறுவன உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவையில் 8 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. இதனால், சுமார் 3 ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, மின்வெட்டை கண்டித்து தொழில் வர்த்தக அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கறுப்புக்கொடி போராட்டம்
அங்கு சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் புதன்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.இதன் ஒரு பகுதியாக நேற்று இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்ற தொழில் முனைவோர், கோவையில் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகளிலும் கருப்புக்கொடிகளை ஏற்றினர். தமிழக அரசைக் கண்டித்து புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருக்கும் என்று தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தின் தொடர்ச்சியாக கோவை டாடாபாத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக மண்டல அலுவலகத்தை தொழில் துறையினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மண்டல தலைமை பொறியாளர் தங்கவேலு உள்பட அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது தொழில் அமைப்பினர், ‘மின்சாரம் இல்லாமல் எப்படி தொழிற்சாலை நடத்துவது, சென்னைக்கு ஒரு நியாயம், கோவைக்கு ஒரு நியாயமா, என்று கேள்வி எழுப்பினர்.

மின்சார விடுமுறை

அப்போது தொழில் அமைப்பினரிடம், பேசிய மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மண்டல தலைமை பொறியாளர் தங்கவேலு, ‘தமிழகத்தில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை இருக்கிறது. கோடை காலத்தில் அதிகளவு மின்சாரம் செலவாகிறது. எனவே, வாரம் 2 நாள் மின் விடுமுறை விட அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். முறையற்ற மின் தடை நேரத்தை ஒழுங்குபடுத்தி, முறையான மின்தடை நேரத்தை அமலாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 1 மணி நேரம் மட்டுமே மின் தடை உள்ளது. கோவையில் 6 மணி நேரத்திற்கு அதிகமாக மின் தடை இருக்கிறது. இந்த வேறுபாட்டை களைய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக