இந்தியா, மலேசியா இடையே ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக கோலாலம்பூர் சென்றுள்ளார் இந்திய விமானப்படைத் தளபதி என்.ஏ.கே.பிரவுன். அரசுமுறையிலான இந்தப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று தெரிகிறது. மலேசிய ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ஸýல்கிஃபெலி பின் முகமது ஸின் மற்றும் விமானப்படைத் தளபதி ஜெனரல் ரோட்ஸôலி பின் தாவுத் உள்ளிட்ட ராணுவ உயரதிகாரிகளுடன் பிரௌன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பின்னர் காங் கெடாக் மற்றும் சுபாங் விமானப்படைத் தளங்களைப் பார்வையிடுகிறார். அங்கு சுகோய்-30 ரக ரஷிய விமானத்தை இயக்கப் பயிற்சியளிப்பது, பராமரிப்பது, கையாளுதல் போன்ற தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளை அவர் மேற்கொள்ளுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரக விமானங்களை இயக்குவது குறித்து 2008-லிருந்தே மலேசிய விமானிகளுக்கு, இந்திய விமானிகள் பயிற்சியளித்து வருகின்றனர். இதற்காக காங் கெடாக் விமான தளத்தில் ஒரு பயிற்சிப் பள்ளியும் நிறுவப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படைத் தளபதியின் மலேசியப் பயணம், ஆசியான் உறுப்பு நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை இந்தியா வலுப்படுத்தி வருவதையும், குறிப்பாக கிழக்கு நாடுகளுடனான இந்தியாவின் கொள்கைகள் வலுப்படுத்தப்பட்டு வருவதையும் காட்டுகிறது.
அமைதி நடவடிக்கைகளில் ஒத்துழைத்தல், பாதுகாப்பு உத்திகளை மேம்படுத்தல் ஆகியன தொடர்பாக மலேசியாவுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியக் கடற்படையும், மலேசியக் கடற்படையுடன் இணைந்து போர்ப் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக