வியாழன், பிப்ரவரி 02, 2012

2ஜி வழக்கில் தீர்ப்பு: 122 உரிமம் ரத்து; சிதம்பரத்தை சேர்ப்பதை சிபிஐ கோர்ட் முடிவெடுக்க உத்தரவு

2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கான 122 உரிமங்களை ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.ஸ்பெக்ட்ரம் வழக்கில் அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சேர்ப்பது தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
தற்போதைய மத்திய உள்துறை அமைச்சரும், முன்னர் நிதித்துறை அமைச்சராக
இருந்தவருமான ப.சிதம்பரத்தையும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சேர்க்க வேண்டும்; இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்; ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் சிபிஐ விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழு கண்காணிக்க வேண்டும் எனக் கோரும் மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும், பொது நல வழக்கு மையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனும் தொடர்ந்த இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரை கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.
இரு நீதிபதிகள் பெஞ்சின் ஒருமனதான தீர்ப்பை, நீதிபதி ஜி.எஸ்.சிங்வி இன்று அறிவித்தார். மற்றொரு நீதிபதியான ஏ.கே.கங்குலி இன்று ஓய்வு பெறுவதால், தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்சில் அவர் இடம்பெற்றார்.
122 உரிமங்கள் ரத்து...
உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில்,  2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கான 122 உரிமங்களை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உரிமங்கள் 4 மாத காலத்துக்குள் ரத்து செய்யப்பட வேண்டும். இந்தக் காலகட்டத்தில், ஏலமுறையில் டிராய் புதிதாக உரிமங்களை வழங்க வேண்டும்.

யுனிடெக் ஒயர்லெஸ், ஸ்வான் டெலிகாம் மற்றும் டாடா டெலிகாம் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லூப், எஸ்-டெல், அல்லையான்ஸ் மற்றும் சிஸ்டெமா ஷியாம் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வீடியோகானில் 21 உரிமங்கள், யுனினாரின் 22, ஐடியாவின் 9, லூப்பின் 21, எஸ்-டெல்லின் 6, சிஸ்டெமாவின் 21, டாடாவின் 3, ஸ்வானின் 13 மற்றும் அல்லையான்ஸின் 2 உரிமங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சேர்ப்பது தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ப.சிதம்பரம் நிலை...
மேலும், ஸ்பெக்ட்ரம் வழக்கில் அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சேர்ப்பது தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி, 4-ம் தேதி (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்குகிறார். சிதம்பரம் சேர்க்கப்படுவாரா என்பது அன்றைய தினம் தெரியவரும்.  
ஒருவேளை, இந்த வழக்கில் அமைச்சர் ப.சிதம்பரம் விசாரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டால், அவர் பதவி விலக நேரிடும் எனத் தெரிகிறது.
மூன்றாவது தீர்ப்பு...
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் சிபிஐ விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழு கண்காணிக்க வேண்டும் என்று கோரும் மனு மீதும் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிபிஐ விசாரணையை கண்காணிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டியதில்லை என்று கூறிய நீதிமன்றம், அதற்கு பதிலாக மத்திய ஊழல் கண்காணிப்புப் பிரிவு, இந்த வழக்கு விசாரணையைக் கண்காணிக்கும் எனத் தீர்ப்பளித்தது.
முன்னதாக, சுப்பிரமணியன் சுவாமியும், வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனும் தங்கள் வாதத்தின்போது, '2ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தை ஆ.ராசா மற்றும் ப.சிதம்பரம் ஆகிய இரு அமைச்சர்களும் இணைந்தே முடிவு செய்ததற்கான ஆவணங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டினர்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டு பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பு ஒன்றும் முக்கிய ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நிதியமைச்சகத்தின் அந்தக் குறிப்பில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு பதிலாக ஏல முறையை கடைப்பிடித்து இருந்தால் இந்த முறைகேட்டை தவிர்த்து இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வாதங்களுக்கு பதிலளித்த சி.பி.ஐ. மற்றும் மத்திய அரசு தரப்பு, அமைச்சர் ப.சிதம்பரம் மீது விசாரணை நடத்தும் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஸ்பெக்ட்ரம் விலையை நிர்ணயம் செய்வதில் அப்போதைய நிதியமைச்சரான ப.சிதம்பரம், முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவுடன் நேரடி தொடர்பில் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேவேளையில், 'ஏல முறையில்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்ததை ப.சிதம்பரம் புறக்கணித்துவிட்டதாக சுப்பிரமணியன் சுவாமியும், பிரஷாந்த் பூஷனும் குற்றம்சாட்டினர்.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசாவை ப.சிதம்பரம்  நான்கு முறை சந்தித்துப் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் சுப்பிரமணியசாமி சுட்டிக்காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக