வெள்ளி, பிப்ரவரி 03, 2012

சோமாலியாவில் 21 ஆண்டுக்குப் பின் பிரிட்டன் தூதர் நியமனம் !

Britain Ambassador appointed to Somalia after 21 years.சோமாலியா நாட்டில், 21 ஆண்டுகளுக்குப் பின், பிரிட்டன் தூதர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக், சோமாலியா நாட்டுக்கு வந்தார். கடந்த 1992ம் ஆண்டில் தான், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கடைசியாக இங்கு வந்தார். அதன் பிறகு, அதாவது 19 ஆண்டுகளுக்குப் பின், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்
வருவது, இதுவே முதல் முறை. அவர் சோமாலியா நாட்டில் புதிய தூதரகம் அமைப்பது, அதற்கான வாய்ப்புகள், பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதை தொடர்ந்து, சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதீஷுவில் புதிய தூதரை நியமிப்பது என்றும், அதற்கான புதிய தூதரகம் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து, புதிய தூதராக, மார் பவுகண் நியமிக்கப்பட்டுள்ளதாக, பிரிட்டன் அறிவித்தது.
மொகாதீஷுவில் புதிய தூதரகம் அமைக்கப்படும் வரை, தற்காலிகமாக கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில், இத்தூதரகம் செயல்படும். தற்போது, சோமாலியா தலைநகரில், லிபியா, எத்தியோப்பியா, சூடான், துருக்கி, ஏமன் போன்ற, சில நாடுகளின் தூதரகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக