ஞாயிறு, ஜனவரி 01, 2012

கப்பலை தடுப்போம் என்ற ஈரானின் அறிவிப்புக்கு - கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனஅமெரிக்கா கொக்கரிப்பு


எண்ணெய் கப்பல்களை தடுத்து வழிமறிப்போம் என ஈரான் அறிவித்துள்ளதை அமெரிக்கா கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, இதனால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது. ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை மேலும் விதித்தால் வளைகுடா நாடுகளை இணைக்கும் ஹோர்முஸ்
நீரிணையை மூடிவிடுவோம் என ஈரான் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதுகுறித்து அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் செய்தியாளர்களிடம் கூறியது:
உலகின் கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதம் இந்தப் பிராந்தியம் வழியாக எண்ணெய்க் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
வளைகுடா நாடுகளை இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையானது பஹ்ரைன், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் போக்குவரத்தை இந்திய பெருங்கடலுடன் இணைக்கிறது.
இந்தப் பகுதி வழியாக செல்லும் கப்பல்களை மறிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டால் அதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று லிட்டில் குறிப்பிட்டார்.
முன்னதாக ஈரான் துணை ஜனாதிபதி முகமது ரெஸ ராஹ்மி பேசுகையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு சொட்டு எண்ணெய் கூட பிற நாடுகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் லிட்டில் இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை மூடுவது என்பது ஒரு கோப்பை தண்ணீரைக் குடிப்பதை விட எளிதான செயல் என்று ஈரான் கடற்படை தளபதி அட்மிரல் ஹபிபுல்லா சயாரி குறிப்பிட்டிருப்பதும் அமெரிக்காவை மேலும் எரிச்சலூட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக