செவ்வாய், ஜனவரி 24, 2012

உங்கள் தலைவருக்கு நான் என்ன செய்ய விரும்புகிறேன் தெரியுமா ?

அமெரிக்க கடற்படையின் ஒரேயொரு கப்பல் மட்டுமே, வெளிநாடு ஒன்றில் வெற்றிச் சின்னமாக உள்ளது. அந்தக் கப்பல், USS Pueblo. வட கொரியாவில் உள்ள இந்தக் கப்பல், இப்போது தலைநகர் யொங்-யாங் அருகேயுள்ள ஆறு ஒன்றுக்கு இழுத்து வரப்பட்டுள்ளது. எதற்காக தெரியுமா? உல்லாசப் பயணிகளுக்கு காட்சிப் பொருளாகக் காண்பிப்பதற்கு! சமீப காலமாகதலைநகருக்கு வரும் உல்லாசப் பயணிகள் இந்தக் கப்பலைக் காண முண்டியடித்துக் கொண்டு வருகிறார்கள். காரணம், இந்தக் கப்பலின் பின்னணியில் சுவாரசியமான கதை ஒன்று உள்ளது!
44 ஆண்டுகளுக்கு முன் இன்றைய தேதியில், அதாவது ஜனவரி 23-ம் தேதி (1968) USS Pueblo கப்பல் வடகொரியர்களால் கடலில் வைத்துக் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்டபோது, அதில் 80-க்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படையினர் இருந்தனர். தமது கடல் எல்லைக்குள் அந்தக் கப்பல் வந்து உளவு பார்த்தது என்று கூறியே வடகொரிய கடற்படை USS Pueblo கப்பலை கைப்பற்றியது.

1968-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் ஜப்பானில் இருந்து புறப்பட்டது இந்தக் கப்பல். கப்பலில் ஹை-டெக் தொலைத் தொடர்பு உபகரணங்கள் இருந்தன. அதில் பயணித்த 80-க்கும் அதிகமானவர்களில், சில மாலுமிகள் தவிர்ந்த மற்றையவர்கள் அனைவருமே அமெரிக்க கடற்படையின் தொலைத்தொடர்பு நிபுணர்கள். இவர்களது நிபுணத்துவம், சங்கேத மெசேஜ்களை டீ-கோடிங் செய்வது!
இந்தக் கப்பல் வரும் விஷயம் வட கொரிய உளவுத் துறையினருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அவர்கள் கப்பலை, அதிலுள்ள தொலைத் தொடர்பு உபகரணங்களுடன் கைப்பற்ற திட்டமிட்டார்கள். தமது கடலுக்குள் கப்பல் வரும் என்று காத்திருந்தார்கள்.ஆனால், USS Pueblo வட கொரியக் கடலுக்குள் வரவில்லை. சர்வதேச கடல் பகுதியிலேயே நின்று கொண்டது. இப்படியான நேரத்தில் வட கொரியா அதிரடி முடிவு ஒன்றை எடுத்தது. சர்வதேசக் கடலில் கப்பலைக் கைப்பற்றி, தமது கடல் பகுதிக்கு இழுத்துவர யுத்தக் கப்பல் ஒன்றை அனுப்பியது.
அமெரிக்க கப்பல், சர்வதேச கடல் பகுதியில் நின்றதால் தாக்குதல் எதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. வட கொரிய போர்க்கப்பல் பீரங்கியால் சுட்டபடி வந்தபோது, இவர்கள் சண்டைக்கு தயாராக இருக்கவில்லை. கப்பலில் ஆயுதங்களும் இல்லை.
இவர்களுக்கு சரணடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்று தெரிந்ததும், கப்பலில் இருந்த ரகசிய ஆவணங்கள் எல்லாவற்றையும் எரித்தார்கள். அதன்பின் சரணடைந்தார்கள். USS Pueblo கப்பல் வட கொரிய போர்க் கப்பலால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டது. கப்பலில் இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். 
அமெரிக்கா கொதித்தது. ஆனால், எதுவும் செய்ய முடியவில்லை.
இதற்கிடையே, இந்தக் கப்பலுடன் அகப்பட்ட கடற்படையினரை வைத்து, தமது சொந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டது வட கொரியா.
தம்மிடம் கைதியாக இருந்த அமெரிக்க கடற்படையினர் சிலரை வரிசையாக நிற்க வைத்து போட்டோ எடுத்தார்கள். எல்லோரும் சிரித்துக் கொண்டு போஸ் கொடுக்க வேண்டும் என்ற கட்டளையின் பின் எடுக்கப்பட்ட போட்டோக்கள் அவை. சிரித்த முகத்துடன் போஸ் கொடுக்க மறுத்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.
ஒருவழியாக போட்டோக்கள் எடுத்து, டைம் சஞ்சிகைக்கு அனுப்பி வைத்தார்கள் வட கொரிய அதிகாரிகள். “பாருங்கள், நாம் கைதிகளை சந்தோஷமாக வைத்திருக்கிறோம்” என்ற குறிப்போடு வட கொரியா அனுப்பி வைத்த போட்டோக்களை டைம் பத்திரிகை பிரசுரித்தது. அதைப் பார்த்து உலகமே அதிர்ந்தது. வட கொரியர்கள் பலவந்தமாக எடுத்த போட்டோ அது என்பது முழு உலகத்துக்குமே தெரிய வந்தது அது எப்படி? போஸ் கொடுத்த அமெரிக்க கடற்படையினர் செய்த ட்ரிக் ஒன்றுதான் வட கொரியாவை சிக்க வைத்தது.
போட்டோவில் நின்ற அனைவரும், தமது கையின் நடு விரலை உயர்த்தியபடி போஸ் கொடுத்திருந்தார்கள். இது உலகம் பூராவும் அறியப்பட்ட ஒரு lewd gesture சைகை. ஆனால் 1960-களில் வட கொரியர்களுக்கு அது தெரிந்திருக்கவில்லை.
போட்டோ எடுத்தபோது, எதற்காக எல்லோரும் நடு விரலை உயர்த்துகிறீர்கள் என்று வட கொரிய ராணுவ அதிகாரி கேட்டிருக்கிறார். அமெரிக்க கடற்படையினர், “எமது நாட்டில் நடு விரலை உயர்த்திக் காட்டினால், ‘குட் லக்’ என்று அர்த்தம் சொன்னதை வடகொரியர்கள் நம்பி, ஆனந்தமாக போட்டோ எடுத்து அனுப்பியிருந்தார்கள்!
விஷயம் தெரிய வந்ததும், போஸ் கொடுத்த அமெரிக்க கடற்படையினருக்கு கடும் சித்திரவதை நடந்தது. ஆனால், கதை வெளியே போய்விட்டது.
பல நாடுகள் கொடுத்த அழுத்தம், பொருளாதாரத் தடை எச்சரிக்கை என்று வட கொரியாவுக்கு எதிராக உலக நாடுகள் அணிதிரள, இவர்களை விடுவிப்பது என்று முடிவு செய்தது வட கொரிய அரசு. 11 மாதங்கள் இவர்கள் சிறையில் இருந்த நிலையில் ஒருநாள், சிறைக்கு வந்த வட கொரிய ராணுவ அதிகாரி ஒருவர், கப்பலின் கேப்டன் லாயிட் புச்சருக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தார். “உங்களை விடுவிக்கப் போகிறோம். அதற்குமுன், நீங்கள் எமது நாட்டுக்கும், எமது தலைவருக்கும் நன்றி கூற வேண்டும். அதை நாம் ஒலிப்பதிவு செய்வோம். முன்பு விரலை உயர்த்திக் காட்டியதுபோல ஏதாவது குரங்கு வேலை செய்தால், இங்கேயே சமாதிதான்” என்பதுதான் உத்தரவு.
கேப்டனும் சம்மதித்து, வட கொரியாவுக்கும், அதன் தலைவர் கிம்-II சங்குக்கும் மனப்பூர்வமான நன்றி கூறினார். அது ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இம்முறை வட கொரியர்கள் உஷாராக இருந்தார்கள். கேப்டன் கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும் கொரிய-ஆங்கில அகராதியில் அர்த்தம் பார்த்து, எல்லாமே நன்றி கூறும் வார்த்தைகள்தான் என்று உறுதி செய்து கொண்டார்கள்.
இதிலும் கேப்டன் லாயிட் புச்சர் ஒரு ட்ரிக் செய்திருந்தார். தனது நன்றி கூறலில் ‘to paean’ என்ற சொல்லை உபயோகித்திருந்தார். அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத இந்தச் சொல்லுக்கு சரியான அர்த்தம், ‘to praise’ என்ற நல்ல அர்த்தம்தான். கொரிய-ஆங்கில அகராதியில் ‘to praise’ என்பதற்கு ‘தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்வது’ என்ற அர்த்தம் இருக்கவே, நன்றி கூறும் ஒலிப்பதிவு ஓகே ஆகியது! ஆனால், ‘to paean’ என்பதை உச்சரிக்கும்போது, ‘to pee on’ (சிறுநீர் கழிப்பது) என்று இழுத்து உச்சரித்திருந்தார் இந்த பொல்லாத கேப்டன்.
இவர்கள் கைது செய்யப்பட்டு சரியாக 11 மாதங்கள் முடிந்த தினத்தில் இவர்களை வட கொரிய – தென் கொரிய எல்லைக்கு அழைத்துச் சென்றனர் வட கொரிய ராணுவத்தினர். இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பாலத்தில் இவர்களை தென் கொரியாவை நோக்கி நடக்க விட்டனர். தென் கொரியா அமெரிக்க ஆதரவு நாடு.
இவர்கள் பாலத்தின்மீது சென்றுகொண்டு இருக்கும்போது, கேப்டனின் நன்றி அறிவிப்பு ஒலிப்பதிவு, வட கொரிய எல்லையில் இருந்து ஒலிபெருக்கியில் சத்தமாக ஒலிக்க விடப்பட்டது. “…wishing to ‘pee on’ the North Korean navy, and most of all ‘pee on’ Premier Kim ll-sung” என்று ஒலித்ததன் நிஜ அர்த்தம், அமெரிக்க கடற்படையினர் பாலத்தைக் கடந்து தென் கொரியாவுக்குள் பத்திரமாக போய் சேரும்வரை வட கொரிய ராணுவத்தினருக்கு புரியவில்லை.
புரிந்திருந்தால் பாலத்தில் வைத்தே சுட்டிருப்பார்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக