புதன், ஜனவரி 18, 2012

அசத்தலான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு !

பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில்  நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகளவில் பிரசித்தி பெற்றது. ஜல்லிக்கட்டு நடத்துவதில் கடந்த சில ஆண்டுகளாக சிற்சில இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால நிபந்தனைகளின்படி  ஜல்லிக்கட்டை நடத்திட மதுரை உயர் நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது. அதன்படி 15 ஆம் தேதி மதுரை அவனியாபுரத்திலும், 16 ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடந்தேறி உள்ளது. அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று சிறப்பாக நடந்தது.

அங்குள்ள திடலில் இருபுறமும் ஜல்லிக்கட்டு காளைகள் புகுந்துவிட முடியாதபடி சவுக்குகட்டைகளால் இரண்டடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு கம்பி வலைகள் கட்டப்பட்டு இருந்தன. பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வசதியாக சவுக்குகட்டை, பலகைகளால் காலரிகள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை முதலே பார்வையாளர்கள் காலரிகளில் இடம்பிடிக்க குவியத்தொடங்கினார்கள். கூட்டத்தால் காலரிகள் நிரம்பி வழிந்தன.
ஜல்லிக்கட்டு காளைகள், அதனை அடக்கிய இளம் காளையர்கள் கீழே விழுந்தால் காயம் அடையாத படி இருக்க முன்னேற்பாடாக தென்னை நார்கள் பரப்பப்பட்டிருந்தது. திடலுக்கு உள்ளேயும், வெளியிலும், காலரிகளிலும் காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.
மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அஸ்ராகார்க் நேரடி மேற்பார்வையில் ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஜல்லிக்கட்டில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு ,மேலூர்,  ஒத்தக்கடை, வரிச்சூர், சத்திரப்பட்டி, மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்தும், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், கரூர், பெரம்பலூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான காளைகள் வந்தன. அவைகளை கால்நடை மருத்துவர்கள் தீவிரமாக பரிசோதனை நடத்தினார்கள்.

அதிகாலை முதலே பரிசோதனை நடத்தப்பட்டு தகுதி உள்ள காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன. ஜல்லிக்கட்டில், தகுதி உள்ள 464 காளைகள் கலந்து கொண்டன. காளைகள் வாடிவாசலின் பின்பக்கம் உள்ள மைதானத்தில் தடுப்புகள் அமைத்து வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மாடுபிடிக்கும் வீரர்களின் பெயர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தது. பதிவு செய்தவர்களின் பட்டியலின்படி அவர்களுக்கு மருத்துவர்கள் குழுவினர் உடல் பரிசோதனை செய்தனர். மாடுபிடிக்க தகுதி உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இதில் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளை நிற பனியனும், பச்சை, மஞ்சள் நிறத்துடன் கூடிய டவுசரும் சீருடையாக வழங்கப்பட்டிருந்தது. சீருடை அணிந்தவர்கள் மட்டுமே மாடு பிடிக்க களத்தில் அனுமதிக்கப்பட்டார்கள்.

காலை 9.40 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் வாடிவாசல் வழியாக அலங்காநல்லூர் முனியாண்டி கோவிலுக்குச் சொந்தமான காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மரியாதை செய்யும் வகையில் அந்தக் காளைகளை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. ஒலிபெருக்கியில் அந்தக் காளைகளின் ஊர், அதற்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடு பிடிவீரர்கள் போட்டிபோட்டு அடக்க முயன்றனர். சில காளைகள் அவர்களின் பிடியில் சிக்கின. பலகாளைகள் ஆக்ரோசமாக துள்ளிக் குதித்து பிடிபடாமல் ஓடின.
சீறி வந்த சில காளைகளின் திமிரிய திமில்களை விடாப்பிடியாக பிடித்து ஓடி இளைஞர்கள் பரிசுகளைத் தட்டிச் சென்றனர். வாடி வாசலை விட்டு விருட்டென வந்த  ஒரு காளை நான்கு கால் பாய்ச்சலில் இளைஞர்கள் கூட்டத்தைக் கடந்து சென்றது. வாடிவாசல் அருகே சுற்றி சுற்றி வந்து வீரர்களை விரட்டிய காளையும் உண்டு.

மாடு பிடிபட்டால், அதைப்பிடித்த வீரருக்கும், யாரிடமும் சிக்காமல் துள்ளிகுதித்து ஓடிவிட்டால் அந்தக் காளையின் உரிமையாளருக்கும் அறிவித்த பரிசுகள் வழங்கப்பட்டன.
தங்ககாசு, வெள்ளிக்காசு, செல்போன், கட்டில், பீரோ, மின்விசிறி, மிக்சி, சைக்கிள், பித்தளை, எவர்சில்வர் அண்டா, சுவர்கடிகாரம், குத்துவிளக்கு, அயர்ன்பார்க்ஸ், வேட்டி, துண்டு, சட்டை ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. ரொக்கபரிசு தொகையும் அவ்வப்போது வழங்கினார்கள்.

ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டி தள்ளியதில் 36 இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 29 பேர் மாடுபிடி வீரர்கள் ஆவர். மற்ற 7 பேர் பார்வையாளர்கள். காயம் அடைந்தவர்களில் 4 பேர் மதுரை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:
1.ரஞ்சித்(வயது 24), பொதும்பு, மதுரை மாவட்டம் 2.தங்கம்(23), பெரியகுறவக்குடி 3.மகாராஜன், சர்க்கலை ஆலை மேட்டுப்பட்டி 4.சீனிவாசன்(27), காந்திகிராமம், திண்டுக்கல் மாவட்டம்.
மாலை 3.50 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. பிராணிகள் நல வாரியத்தைச் சேர்ந்த மனோஜ்ஓஷ்வால், சிவக்குமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதா? என்பதை பார்வையிட்டனர். மேலும் அவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தனியாக வீடியோ படம் எடுத்தனர்.
ஆம்புலன்சுகளும், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மாடுமுட்டி பலத்த காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக மதுரை பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். அங்கு சேர்க்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சகாயம், எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், கருப்பையா, சாமி, தமிழரசன், நிலக்கோட்டை ராமசாமி, அலங்காநல்லூர் யூனியன் தலைவர் கீதாரவிச்சந்திரன், துணைதலைவர் முத்துமாரி பாண்டியன், ஆணையாளர் பக்கர்முகமது, பேரூராட்சி தலைவர் கீதாபாலாஜி, நிர்வாக அதிகாரி கணேசன், வட்டார வளர்ச்சி அதிகாரி தேன்மொழி, வாடிப்பட்டி தாசில்தார் ருக்குமணி, ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் தெத்தூர்மாரிமுத்து, நத்தம் யூனியன் தலைவர் யோகமலர் உத்தமன், அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் நிர்வாக அலுவலர் அருள்செல்வம், ஜல்லிக்கட்டு பேரவை&தமிழ்நாடு மாநில தலைவர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டுகாளைகள் காயம் அடைந்தால் சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்கள் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். மாடுபிடி வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழுவினர் மைதானம் அருகிலும், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தயார் நிலையில் இருந்தனர். காயம் அடைந்து வந்தவர்களுக்கு முதலுதவி அளித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி பெரியார் பேருந்து நிலையம், வாடிப்பட்டி, சோழவந்தான் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அலங்காநல்லூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஜல்லிக்கட்டை காலரிகளில் அமர்ந்து பார்த்தார்கள். ஆண், பெண் வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் ஜல்லிக்கட்டை ரசித்து பார்த்தார்கள். கூட்டத்தினரையும், சீறிப்பாய்ந்த காளைகளையும், வீரர்கள் அடக்கிய மெய்சிலிர்த்த காட்சிகளையும் தங்களது வீடியோ கேமரா, கேமராக்களில் படம் பிடித்தார்கள். வெளிநாட்டினர்களில் ஒரு சில பத்திரிகையாளர்களும் வந்து இருந்தனர். அவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை லேப்&டாப் மூலம் இணையதளத்தின் வழியாக தங்களது செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியபடி இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக