புதன், ஜனவரி 04, 2012

தூங்கிய விமானிகள்; தப்பிய விமானம் !


100 பயணிகளுடன் துபாயிலிருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தின் இரு விமானிகளும் தூங்கிவிட்டதால், விமானம் மும்பையைத் தாண்டி கோவா அருகே சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து 15 நாட்களுக்குப் பின்னர் தற்போது வெளியே கசிய ஆரம்பித்துள்ளது.
கடந்த 15 நாட்களுக்கு முன்னர், துபாயிலிருந்து 100 பயணிகளுடன் IC 612 என்ற ஏர் இந்தியா விமானம் மும்பை கிளம்பியது. துபாய் நேரப்படி இரவு 1.35 மணிக்கு இந்த விமானம் கிளம்பி, இந்திய நேரப்படி
காலை 7 மணிக்கு ஜெய்ப்பூரில் தரையிறங்கியது.
பின்னர் ஜெய்ப்பூரிலிருந்து மும்பை கிளம்பியது. ஆனால், கிளம்பிய சிறிது நேரத்தில் ஆட்டோ பைலட்டை இயக்கிவிட்டு முதலில் ஒரு  விமானி தூக்கத்தில் ஆழ்ந்தார். இதைத் தொடர்ந்து துணை  விமானியும் தூங்கிவிட்டார். விமானம் ‘A 474 South route’ என்ற பாதையில் சென்று கொண்டிருந்தது. விமானத்தை இயக்கியது ஆட்டோ பைலட்.
இந்நிலையில் விமானம் மும்பை வான் வெளிக்குள் நுழைந்ததும் மும்பை விமான நிலையத்தின் தரைக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் பறக்கும் உயரத்தைக் குறைக்குமாறு விமானிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தனர். ஆனால், விமானிகளிடமிருந்து எந்த பதில் இல்லை. சாதாரணமாக விமானம் விமான நிலையத்திற்கு 100 மைல் தொலைவில் வரும்போதே உயரத்தையும் வேகத்தையும் குறைக்க ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், அந்த விமானம் தொடர்ந்து அதிக உயரத்தில் அதே வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. இதனால் விமான கட்டுப்பாட்டு நிலையத்தில் விமானம் கடத்தப்பட்டுவிட்டதோ என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இதையடுத்து SELCAL (selective calling) என்ற முறையைப் பயன்படுத்தி விமானத்தை தரைக் கட்டுப்பாட்டு பிரிவினர் தொடர்பு கொண்டனர். இந்த முறையைப் பயன்படுத்தினால் விமானிகளின் காக்பிட் அறையில் அலாரம் ஒலிக்கும். இதை அவ்வளவு சீக்கிரத்தில் பயன்படுத்திவிட மாட்டார்கள். மிக அவசர நேரங்களில் மட்டுமே அது பயன்படுத்தப்படும்.
மும்பை விமான கட்டுப்பாட்டு நிலையம் SELCAL முறையைப் பயன்படுத்தி விமானத்தைத் தொடர்பு கொண்டதும் காக்பிட்டிலுள்ள அலாரம் ஒலிக்க ஆரம்பித்தது. அதைக் கேட்டு திடுக்கிட்டு இரு விமானிகளும் விழித்துள்ளனர். இவ்வளவும் நடக்கும் முன்னர் விமானம் மும்பை வான்வெளியைத் தாண்டி கோவாவுக்குப் பாதி தூரம் வரை போய்விட்டது. இதையடுத்தபிரு விமானிகளும் விமானத்தை திருப்பி மும்பையில் தரையிறக்கினர்.
இச்சம்பவம் நடந்த விசயத்தை ஏர்-இந்தியா மூடி மறைக்கப் பார்த்தது. இருப்பினும் விஷயம் சிறிது சிறிதாக வெளியே கசிய ஆரம்பித்துள்ள நிலையில் ஏர்-இந்தியா அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றனர். எப்படியோ, விமானிகள் தூங்கினாலும் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் போனதே என்று மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக