வியாழன், ஜனவரி 12, 2012

பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் பதவி நீக்கம் !


பாகிஸ்தான் பிரதமர் யூசூஃப் ராஜா கீலானிபாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் காலித் நதீம் லோடி பிரதமர் யூசூஃப் ராஜா கீலானியால் பதவி திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை யாரும் எதிர்பாக்கவில்லை என்றும், அது திடீரென இடம்பெற்றுள்ளது என்றும் கூறுகிறார் பிபிசியின் உருது மொழி ஒலிபரப்பின் ஆசிரியர் ஆமீர் அஹமது கான். “பாகிஸ்தானின் சிவில்
மற்றும் இராணுவத் தலைமைகளிடையே பல காலமாக நீறுபூத்த நெருப்பு போல இருந்து வந்த உறவுகளின் பிரதிபலிப்புதான் இந்த நடவடிக்கை”

அமெரிக்கவுடனான தொடர்புகள் போன்றவற்றில் கொள்கை முடிவுகளை யார் எடுப்பது குறித்தும் இருதரப்பினரிடையே ஒரு நெருடல் இருந்து வருகிறது எனவும் ஆமீர் அஹமது கான் சுட்டிக்காட்டுகிறார்.
எனவே பாதுகாப்புச் செயலர் நீக்கப்பட்டிருப்பது இப்படியான மோதல்களின் வெளிப்பாடுதான் எனவும் அவர் கூறுகிறார்.
பாகிஸ்தானில் சிவில் நிர்வாகத்துக்கும் இராணுவத்துக்கும் இடையேயான உறவுகள் எதுவுமே சரியாக இல்லை என்பது மீண்டும் வெளிப்படையாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மோதல் ஏன்?

அந்நாட்டின் இராணுவத் தளபதி சீனாவுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த போது, சீனாவின் பீப்பிள்ஸ் டெய்லி பத்திரிகைக்கு பிரதமர் கீலானி ஒரு பேட்டியளித்திருந்தார்.
அதில் நாட்டின் உச்சநீதிமன்றத்துக்கு உளவுத்துறை தலைவரும், இராணுவத் தளபதியும் சர்ச்சைகுரிய ஒரு அறிக்கை குறித்து தெரிவித்திருந்த விஷயங்கள் சட்டவிரோதமானவை என்று கூறியிருந்தார்.
அதாவது பாகிஸ்தானில் ஒரு இராணுவப் புரட்சி ஏற்பாடாமல் தடுக்க அமெரிக்கா உதவ வேண்டும் என்று, அதிபருக்கு தெரிந்து எழுதப்பட்ட ஒரு இரகசியக் கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சைகள் நிலவி வருவது தொடர்பிலேயே அவர்கள் உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்த கருத்துக்களை சட்டவிரோதமானவை என்று பிரதமர் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.
அரசின் மூலமாக முறைப்படி அனுப்பபடாத ஒரு அறிக்கை சட்டவிரோதமானது என்பது பிரதமரின் வாதம்.
இராணுவத் தலைவர் சீனாவில் இருக்கும் போது சீன இதழ் ஒன்றுக்கு இப்படியான பேட்டியை அளித்தது அவருக்கு மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இராணுவம் எச்சரிக்கை

பாதுகாப்புச் செயலரின் பதவி நீக்கம் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று இராணுவம் கூறியுள்ளது.
அது அந்நாட்டின் சிவில் நிர்வாகத்துக்கு விடுக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் நாட்டில் இராணுவப் புரட்சியின் மூலம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை என்றும் ஆமீர் அஹ்மது கான் கூறுகிறார்.
ஏனென்றால் நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் அப்படியான ஒரு தேவை இருப்பதாக உணரபப்டவில்லை என்றும், சரித்திர ரீதியாகப் பார்த்தால், நாட்டில் ஏதவது பெரிய அளவிலான உள்நாட்டுப் பிரச்சினையோ அல்லது நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து அச்சுறுத்தல் இருந்த போதே, இராணுவம் தலையிட்டு ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்றும் கூறும் அவர். தற்போது அப்படியான சூழல் ஏதும் இல்லை எனவும் கூறுகிறார்.
அதே நேரம் நாட்டின் பல விஷயங்களில் தங்களுக்கு உள்ள ஆளுமையையும் அதிகாரத்தையும் விட்டுக் கொடுக்க இராணுவம் தயாராக இல்லை என்கிற செய்தியும் வெளியாகியுள்ளது. அதில் நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையும் அடங்கும்.
மேலும் பாகிஸ்தானில் ஜனநாயக நிறுவனங்களும் இராணுவத்துடன் இணைந்தே செயல்படவேண்டிய ஒரு நிலையும் அங்கு தொடர்ந்து இருந்து வருகிறது.
இதே வேளை உச்சநீதிமன்றம் அண்மையில் ஆளும் தரப்பினர் மீது கடுமையான விமர்சனங்களை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தகுந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக