சென்னை: சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.முத்துச்செல்வி போட்டியிடுவார் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முத்துச்செல்வி சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக உள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த கருப்பசாமி வெற்றி பெற்றார். அவருக்கு அமைச்சர் பதவியும் தந்தார் ஜெயலலிதா.
ஆனால், கருப்பசாமி புற்று நோய் தாக்கி மரணமடைந்தார். இதையடுத்து இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.
6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், அந்தக் காலக் கெடு ஏப்ரல் 21ம் தேதி முடிகிறது. ஆனால், இன்னும் இடைத் தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.
இந் நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை ஏதும் நடத்தாமல் தனது வேட்பாளரை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.முத்துச்செல்வி நிறுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துச்செல்வி சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக உள்ளார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. சங்கரலிங்கத்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொகுதியில் மார்ச் மாதத்தில் இடைத் தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது.
இந்தத் தொகுதியில் மதிமுக தனித்துப் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுகவும் வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சியாக இருந்த விஜய்காந்தின் தேமுதிக, இடதுசாரிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதே போல திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரசின் நிலையும் தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக