இந்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத்துக்கும் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷிக்கும் இடைப்பட்ட மோதல் உச்சத்தை அடைந்திருக்கிறது.
"எல்லா அமைப்புகளுமே கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை தான், தேர்தல் ஆணையமும் சட்ட அமைச்சகத்தின் நிர்வாகக் கண்காணிப்புக்கு அடங்கியது தான்" என்று சட்ட அமைச்சர் சொல்லிக்கொண்டிருக்க, அதற்கு 'விலக்கு' அளிக்கவேண்டும் என்று பின்னவர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். சட்ட
அமைச்சரின் கருத்து ஒரு தொலைகாட்சி நேர்முகத்தில் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த மோதலின் ஒரு பகுதியாக, சட்ட அமைச்சர் சொன்ன ஒருகருத்துக்காக தேர்தல் ஆணையம் அவருக்கு அறிவிக்கை (Notice) அனுப்பியிருந்தது. "ஒழுங்கு விதிகளை மீறிய உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?" என்ற அந்த அறிவிக்கைக்குக் காரணமாக, சட்ட அமைச்சர் சல்மான் சொன்னது இதுதான்: "பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு 27 சதவீதத்தில் இருந்து பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 9 சதம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்".
உ.பி போன்ற மாநிலங்களின் தேர்தல் நேரத்தில் தேர்தல் பலனுக்காக இந்தக் கருத்து வெளியிடப்பட்டதாக தேர்தல் ஆணையம் கருதியதால் அறிவிக்கை அனுப்பியது. ஆனால் அதே வேகத்தில் சட்ட அமைச்சரின் பதிலும் இருந்தது. "இது ஒன்றும் புதிய விஷயமல்ல; ஒழுங்கு விதிகளை யாரும் மீறவுமில்லை. 2009 ல் எங்கள் கட்சி தேர்தல் அறிக்கையிலேயே சொல்லப்பட்டது தான். மேலும், எங்களால் ஏற்கனவே ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் முன்னெடுக்கப்பட்ட ஒன்று தான்."
சல்மானின் இந்த மறுமொழி இன்றைய தேர்தல் ஆணைய நிர்வாகக் கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறதாம். அக்கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சலாஹுத்தீன் யாகூப் குரைஷி, மற்ற ஆணையர்கள் வி.எஸ். சம்பத், ஹெச். எஸ்.பிரம்மா ஆகியோருடன் மற்ற அலுவலர்களும் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தலைமை தேர்தல் ஆணையருக்கு சமாதானமாக மறுகடிதம் அனுப்பியிருக்கிறார் பிரதமர். அதில், "தேர்தல் ஆணையத்தின் சுயேட்சை அதிகாரத்தையும், அரசியலமைப்பில் அதற்கிருக்கும் அங்கிகாரத்தையும் யாரும் குறைத்துமதிப்பிட முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கடிதம் பற்றி கேட்கப்பட்டதற்கு, அதுபற்றி கருத்து தெரிவிக்க எஸ்.ஒய். குரைஷி மறுத்துவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக