செவ்வாய், ஜனவரி 10, 2012

ஈரானுக்கு பணம் அனுப்ப இந்தியா படும் பாடு!


Oilஅணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை இறுக்கி, அந் நாட்டின் மத்திய வங்கியோடு பணப் பரிமாற்றம் செய்யவும் தடை போட்டுள்ளதால், அந் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெரும் சிக்கலில் ஆழ்ந்துள்ளன. ஈரானிடம் வாங்கப்படும் கச்சா எண்ணெய்க்கு அந் நாட்டின் மத்திய வங்கியிடம் தான் டாலர்களில் பணம் செலுத்த வேண்டும். தினந்தோறும் ஈரானிடம் இருந்து 3,70,000 பேரல் கச்சா எண்ணெய்யை வாங்கும் இந்தியா இதற்காக மாதந்தோறும் அந்த நாட்டுக்கு பல்லாயிரம் கோடிகளை டாலர்களில் செலுத்தி வருகிறது.

இதற்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள ஈரானின் இஐஎச் பேங்க் (EIH Bank) மூலமாக இந்தியா பணத்தை செலுத்தி வந்தது. இங்கு, டாலர்களில் இல்லாமல் யூரோ கரன்சி மூலமாக ஈரானுக்கு பணத்தை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தி வந்தன.

ஆனால், ஈரான் மீதான பொருளாதாரத் தடையில் ஐரோப்பாவும் சேர்ந்து கொள்ள, ஜெர்மனியும் கையை விரித்துவிட, இந்த வழியும் மூடப்பட்டுவிட்டது.

இதையடுத்து துருக்கியின் ஹல்க் பேங்க் (Halk bank) மூலமாக ஈரானுக்கு இந்தியா பணத்தை அனுப்பி வந்தது. ஆனால், அமெரிக்காவின் நெருக்குதலையடுத்து, இந்த வேலையை இனியும் செய்ய முடியாது என்று துருக்கி கூறிவிட்டது.

இதையடுத்து ரஷ்யா உள்ளிட்ட ஈரானுக்கு மிக நெருக்கமான, அதே நேரத்தில் அமெரிக்கா- ஐரோப்பாவுக்கு அஞ்சாத நாடுகள் மூலமாக ஈரானுக்கு பணம் செலுத்துவது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. ஆனால், ரஷ்யாவும் உதவ முன் வராவிட்டால், வாங்கப்படும் கச்சா எண்ணெய்க்கு டாலருக்குப் பதிலாக ரூபாயையே தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனம் இந்திய வங்கிகளில் கணக்கைத் துவக்க வேண்டும். ஈரானிடம் வாங்கப்படும் கச்சா எண்ணெய்க்கு இந்தியா, இந்தக் கணக்குகளில் தனது பணத்தை (ரூபாயாகவே) செலுத்தும்.

இந்தப் பணத்தைக் கொண்டு இந்தியாவிலிருந்து தனக்குத் தேவையான பொருட்களை ஈரான் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், இந்தப் பணத்தை வைத்து இந்தியாவிடமிருந்து ஆயுதங்கள் எதையும் ஈரான் வாங்க முடியாது. உணவு தானியங்கள், கருவிகள், எந்திரங்களைத் தான் வாங்க முடியும்.

இந்தத் திட்டம் குறித்து ஈரானுடன் பேச விரைவில் மத்திய நிதி அமைச்சகம், வர்த்தகத்துறை, எரிசக்தித்துறை, வெளியுறவுத்துறை, ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த அதிகாரிகள் குழு வரும் 16ம் தேதி ஈரானுக்குச் செல்ல உள்ளது.

தேசிய பாதுகாப்புத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் தலைமையிலான இந்தக் குழு இந்தியாவில் தரப்படும் ரூபாயைக் கொண்டு ஈரான் எதை எதை வாங்கலாம், எதை செய்யக் கூடாது என்று ஒரு பட்டியலைத் தயாரித்துக் கொண்டுள்ளது.

இந்தப் பட்டியலுடன் ஈரானுக்கு செல்லப் போகிறது இந்தக் குழு.

செளதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு மிக அதிகமான கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடு ஈரான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி மூலம் தான் ஈரான் தனது 60 சதவீத வருவாயை ஈட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக