கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.01.2012) பலஸ்தீனத்தின் கல்கிலியா பிரதேசத்தின் அஸுன் கிராமத்தைச் சுற்றிவளைத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை 14, 16 வயதுடைய இரண்டு சிறுவர்களைக் கைதுசெய்துள்ளது.
20 இராணுவ வாகனங்கள் சூழ இக்கிராமத்தினுள் அத்துமீறிப் புகுந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், அப்பகுதியில் வாழும் பலஸ்தீனர்களை அச்சுறுத்துமுகமாகப் பல்வேறு அடாவடித்தனங்களை மேற்கொண்டுள்ளது. மேற்படி இரண்டு
சிறுவர்களையும் பிடித்துக் கரங்களை முதுகுப் புறமாய்க் கட்டிய ஆக்கிரமிப்பு இராணுவம், அவர்களின் கண்களைத் துணியால் கட்டி இழுத்துச் சென்றுள்ளது. இச்சிறுவர்களின் குடும்பத்தவர்களையும் அக்கிராமத்தில் வாழும் ஏனைய பலஸ்தீன் குடும்பங்களையும் அச்சுறுத்துமுகமாகவே அவ் இரண்டு சிறுவர்களையும் ஆக்கிரமிப்புப் படை கடத்திச் சென்றுள்ளது என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.இதே தினத்தில் அல் கலீல் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் அத்துமிறி நுழைந்து தாக்குதல் நடாத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், நகரின் பிரதான நுழைவாயில்களுக்கு அருகில் பாதைத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது.
சோதனையிடுதல் என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு இராணுவம் மேற்கொண்ட கடுமையான கெடுபிடிகள் காரணமாக அப்பிரதேச மக்களின் சுமுக வாழ்வு சீர்குலைந்து எங்கும் ஒருவித பதற்றம் நிலவியதாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஞாயிறன்று மேற்குக்கரை பிராந்தியத்தின் பல்வேறு பலஸ்தீன் கிராமங்களிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் அத்துமீறிப் புகுந்து அடாவடித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அனேகமான இடங்களில் பலஸ்தீன் பொதுமக்களைக் கிளர்ந்து எழத்தூண்டும் வகையிலேயே ஆக்கிரமிப்பாளரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன என்று அத்தகைய சம்பவங்களை நேரில் கண்ட சாட்சிகள் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் "வெகுவிரைவில் காஸா மீது மற்றொரு உக்கிரமான தாக்குதல் முன்னெடுக்கப்படும்" என்று இஸ்ரேலிய இராணுவ உயரதிகாரி பென்னி கான்ட்ஸ் செய்தி வெளியிட்டிருந்தார். அது குறித்து, "காஸா மீது மற்றொரு காண்டுமிராண்டித் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொள்ளும் பட்சத்தில் சர்வதேச சமூகம் அதனை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது" என பலஸ்தீன் பாராளுமன்றப் பேச்சாளர் கலாநிதி அஹ்மத் பஹ்ஹார் பதிலடி கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமது அடாவடித்தனங்களின் மூலம் பலஸ்தீன் பொதுமக்களையும் விடுதலைப் போராளிகளையும் போருக்குத் தூண்டிவிட்டு, தாம் ஏற்கெனவே திட்டமிட்டுள்ள காஸா தாக்குதலை சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் நியாயப்படுத்துவதற்கான இஸ்ரேலின் தந்திரமாகவும் இது இருக்கலாம் என அரசியல் அவதானிகள் ஐயுறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக