நியூசிலாந்து கடலில் கடலடிப் பாறையில் மோதி சேதமடைந்து நின்றிருந்த சரக்குக் கப்பல், நேற்று இரண்டாக உடைந்து மூழ்கியது. கப்பலைக் காப்பாற்றும் எந்த முயற்சியும் பலிக்கவில்லை. கப்பலில் உள்ள சரக்கை நடுக்கடலில் வைத்து மற்றொரு கப்பலுக்கு மாற்றுவதும் இயலாத காரியம் என்று கைவிடப் பட்டதில், கப்பலில் இருந்த சரக்கு கன்டெயினர்களும் கடலில் மூழ்கின.
கப்பல் சரியும்போது கன்டெயினர்கள் கடலில் வீழ்கின்றன
கடலில் மூழ்கிய சரக்கு மற்றும், கப்பலில் இருந்த எரிபொருள் ஆகியவை கடலில் கலந்ததால், நியூசிலாந்துக் கடல் முன் எப்போதும் இல்லாத அளவில் மாசடையப் போகின்றது என கூறப்படுகின்றது.
லைபீரியக் கொடியுடன் சரக்குகளை ஏற்றிச் சென்ற 47,230 டன் எடையுள்ள இந்தக் கப்பலின் பெயர் ரீனா. நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியான டோரங்காவில் இருந்து 22 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியே இருந்த பாறையில் கப்பலின் பின் பகுதி மோதியதாலேயே கப்பல் சேதமடைந்தது.
கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளான கப்பல், கடந்த 3 மாத காலமாக அந்த இடத்தில் நின்றபடி சிறிதுசிறிதாக மூழ்கிக் கொண்டிருந்தது.
தொடர்ந்து அடித்த உக்கிரமான அலைகள் காரணமாகவும், கப்பலில் ஏற்பட்ட வெடிப்புகள் பெரிதாகிய காரணத்தாலும், நேற்று கப்பல் இரண்டாக உடைந்தது. அதில் ஒரு பகுதி முழுமையான மூழ்கிவிட, மீதிக் கப்பல் சிறிதுசிறிதாக மூழ்கத் தொடங்கியுள்ளது.
நியூசிலாந்து கடல்வளத்துறை இன்று (செவ்வாய்க்கிழமை) தமது அறிக்கையில், “கப்பலின்

நேற்று (திங்கட்கிழமை) கப்பல் இரண்டாக உடைந்தபோது..
ஒரு பகுதி இன்னமும் தண்ணீருக்கு வெளியேதான் உள்ளது. ஆனால், பாலம் உட்பட மிகுதிப் பாகங்களும், அதில் இருந்த கன்டெயினர்களும் கடலுக்கு அடியே சென்றுவிட்டன. மூழ்கிக் கொண்டிருக்கும் பகுதியைச் சுற்றியுள்ள கடலின் ஆழம் 30 மீட்டர் மட்டுமே (அதன்கீழ் பாறை உள்ளது) இதனால், இதற்கு அருகே வேறு எந்தக் கப்பலும் மீட்பு நடவடிக்கைக்கு செல்வது இயலாத காரியம்” என்று தெரிவித்துள்ளது.

விபத்து ஏற்படுவதற்கு முன்னர்..
விபத்து ஏற்பட்டதிலிருந்து இன்றுவரை கப்பலில் இருந்த எரிபொருளை சிறிதுசிறிதாக வெளியேற்றியதில், கப்பலில் இருந்த அடர்த்தியான டாக்ஸிக் எரிபொருளில் பெரும்பகுதி வெளியேற்றப்பட்டு விட்டது. அத்துடன் எடை குறைந்த 400 கன்டெயினர்களையும் அகற்றக் கூடியதாக இருந்தது. இருப்பினும் கப்பலில் மேலதிக எரிபொருள் உள்ளது.
கப்பலில் இருந்த சரக்கு பெரும்பாலும், மரப் பொருட்கள், பிளாஸ்டிக், மற்றும் பால் பவுடர் ஆகியவை. விபத்து ஏற்பட்டவுடன் கடலுக்குள் வீழ்ந்த இவற்றில் ஒரு பகுதி, விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலுள்ள கடற்கரை வரை தரையில் ஒதுங்கியுள்ளன. கடலுக்குள் வீழ்ந்த சுமார் 20 கன்டெயினர்கள் அருகிலுள்ள தீவுகளில் ஒதுங்கியுள்ளன.
கப்பலைச் செலுத்திவந்த கேப்டன், மற்றும் நெவிகேஷன் ஆபிஸர் ஆகிய இருவர்மீதும் (இருவருமே பிலிப்பீன் பிரஜைகள்) நியூசிலாந்தில், வழக்கு பதிவாகியுள்ளது. அபாயகரமான முறையில் கப்பலைச் செலுத்தினார்கள் என்பது இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு.
இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நியூசிலாந்துச் சட்டப்படி இவர்களுக்கு அதிகபட்சம் 3 லட்சம் டாலர் அபராதம் அல்லது 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். கப்பல், டாய்னா ஷிப்பிங் நிறுவனத்துக்கு சொந்தமானது. சரக்கு ஏற்றுவதற்காக மெடிட்டரேனியன் ஷிப்பிங் நிறுவனத்தால் வாடகைக்கு அமர்த்தப் பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக