சென்னை தியாகராய நகரில் ரங்கநாதன் தெரு, உஸ்மான்சாலை ஆகியவை வணிக வளாகங்கள் நிறைந்த பகுதி. இங்கு நகை மற்றும் ஜவுளி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வாங்குவதற்கு சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்கள் படையெடுக்கிறார்கள். இதனால் இந்த பகுதியில் உள்ள கடைகளில் எப்போதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதும். இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள பல வணிக வளாகங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.இதையடுத்து சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து விதிமுறையை மீறியதாக கூறி ரங்கநாதன் தெருவில் 26 கடைகள் உள்பட மொத்தம் 36 கடைகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி சீல் வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து வியாபாரிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பேரில் ஒரு பார்வையாளர் குழுவை ஐகோர்ட்டு நியமித்தது. அதை எதிர்த்து வியாபாரிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
சுப்ரீம்கோர்டு நீதிபதிகள் மனுவை விசாரித்து 6 வாரத்திற்கு சீல் வைக்கப்பட்ட கடைகளை திறப்பதற்கு உத்தரவிட்டனர். சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவால் ரங்கநாதன் தெரு வியாபாரிகள் கடைகளில் வேலைபார்க்கும் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று இரவோடு இரவாக கடைகள் திறக்கப்படும். வேலைக்கு வாருங்கள் என்று ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான ஊழியர்கள் இன்று காலையிலேயே தியாகராயநகருக்கு வந்து விட்டனர்.
வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இன்று மாலைக்குள் வந்து சேருகிறார்கள். இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகளுக்கு இதுவரை வராததால் கடை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. பணிக்கு திரும்பிய ஊழியர்களும் கடையை திறக்க வந்த வியாபாரிகளும் கடையை திறப்பதற்காக காத்திருந்தனர். ரத்னா ஸ்டோரில் ஊழியர் ஒருவர் மெகாபோன் மூலம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வந்துள்ளது.
இதனால் கடை திறக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அறிவித்த வண்ணம் இருந்தார். ரத்னா ஸ்டோர் உரிமையாளரும், ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்க ஆலோசகருமான பி.எஸ்.ரத்தினம் நாடார் கூறியதாவது:-
கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இந்த பகுதியில் கடை நடத்தி வருகிறோம். ரங்கநாதன் தெருவுக்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் விரும்பி வருவதற்கு காரணம் ஒரு திருமணத்திற்கு தேவையான தங்கநகைகள் முதல் பாத்திரங்கள் வரை அத்தனையும் ஒரே இடத்தில் வாங்க முடியும்.
மேலும் மற்ற இடங்களைவிட விலை குறைவாகவும், தரமான பொருட்களாகவும் கொடுக்கிறோம். குடும்பத்தோடு பொருட்களை வாங்க வருகிறார்கள். வாங்கும் பொருட்களை அவர்கள் இல்லங்களுக்கு வேனில் டெலிவரி செய்கிறோம். கடந்த 3 மாதங்களாக கடைகள் சீல் வைக்கப்பட்டதால் வியாபாரிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த கடைகளில் ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்கி வேலை பார்த்து வந்தனர். அவர்களில் சிலர் ஊர்களுக்கு சென்று விட்டனர். பலரை நாங்களே தங்க வைத்து சம்பளத்துடன் உணவும் வழங்கி வந்தோம். இப்போது இடைக்காலமாக கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக