இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மக்கள் செல்வாக்கை இழந்து வருகின்றனர் என்று 2007 ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு தகவல்கள் கிடைத்து இருந்தன.
யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டு இருந்த தமிழ் பாதிரி ஒருவர் இது குறித்த தகவல்களை தூதரகத்துக்கு வழங்கி இருக்கின்றார். இவர் கிளிநொச்சியிலும் சுமார் 13 வருடங்கள் வசித்து இருக்கின்றார். இவரை அமெரிக்க தூதுவராக இருந்த ரொபேட் ஓ பிளேக் ஏப்ரல் மாதம் சந்தித்து உரையாடி இருக்கின்றார். இச்சந்திப்புக்கு முந்திய நாட்களில் கிளிநொச்சிக்கு சென்று வந்து இருந்தார்
பாதிரி.
இவர் தூதுவருக்கு கொடுத்த விளக்கத்தில் வன்னியை சேர்ந்த மக்களில் அதிகமானவர்கள் புலிகளை ஆதரிக்கவில்லை. ஆனால் வன்னியை விட்டு வெளியே செல்ல வழி இல்லாமல் தவிக்கின்றனர்.
உண்மையில் தமிழர்களுக்கு இரண்டு பிரச்சினைகள். ஒன்று அரசு, மற்றையது புலிகள், மலையகத் தமிழர்கள்தான் பெரும்பாலும் வன்னியில் புலிகளுக்கு ஆதரவாக உள்ளனர்.
ஏனெனில் ஒரு தலைமுறை இடைவெளிக்கு முன் மலையகத்தில் இருந்து வன்னிக்கு வந்து சேர்ந்த இந்த இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு வன்னி பாதுகாப்பான இடமாக உள்ளது.
வீட்டுக்கு ஒருவரை போராளியாக தராவிட்டால் வீட்டுக்கு வந்து இருவரை பிடித்துச் செல்வர் என்று புலிகள் மக்களை மிரட்டி வைத்திருந்தனர்.
இத்தலை விதியை மாற்ற ஏராளமான தமிழர்கள் காட்டு வழியாக வன்னியை விட்டு வெளியேற முயன்று வருகின்றனர். தமிழ் மக்களின் அபிலாஷைகளை புலிகள் வெளிப்படுத்துகின்றார்கள் இல்லை.
புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட இயக்கத்தின் அதிமுக்கிய புள்ளிகளை பாதுகாக்கின்றமையில் மாத்திரமே கவனம் செலுத்தி வருகின்றனர்.
புலிகள் இலங்கைப் பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வு காண்பார்கள் என்பது சந்தேகத்துக்கு உரிய விடயம் என்று சொல்லி இருக்கின்றார்.
2007 ஆம் ஆண்டு மே 10 ஆம் திகதி தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்த ஆவணம் ஒன்றில் இருந்து இவ்விடயங்கள் தெரிய வந்து உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக