ஈரான் அரசு ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக கூறி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த நாட்டின் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில், ஈரான் அணுசக்தி விஞ்ஞானியும் யுரேனியம் செறிவூட்டும் மையத்தின் துணை இயக்குனருமான முஸ்தபா அகமதி ரோஷன் (32) நேற்று கொல்லப்பட்டார். அவர் காரில் சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரோஷன் சம்பவ இடத்திலே இறந்தார். காரை ஓட்டிய அவரது பாதுகாவலர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இறந்தார்.
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் காரணம் என்று ஈரான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்நாட்டு துணை அதிபர் முகமது ரேசா ராகிமி கூறுகையில், ‘இந்த தாக்குதல் மூலம், எதிரிகளால் ஈரானின் அணுசக்தி செயல்பாடுகளை தடுத்து நிறுத்திவிட முடியாது’ என்றார். ஈரான் பாராளுமன்றமும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதற்கிடையில், ஈரானின் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் டாமி வெய்டர் கூறுகையில், ‘அமெரிக்காவுக்கு இந்த சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை. வன்முறை செயல்களை அமெரிக்கா எப்போதும் எதிர்த்து வருகிறது’ என்றார். கடந்த 2 ஆண்டுகளில், ஈரானில் இதே பாணியில் 3 விஞ்ஞானிகள் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக